கோவாவில் இறைச்சிக் கடைகள் மூடல்: மாட்டிறைச்சி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு!
கோவாவில் இறைச்சி வியாபாரிகள் கடையடைப்புப் போராட்டம் நடத்துவதால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நாள்களில் மாட்டிறைச்சி தட்டுப்பாடு ஏற்பட வாப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
கோவா மாநிலத்தில் பசுப் பாதுகாவலர்கள் தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தி வருவதால் நேற்று முதல் இறைச்சி வியாபாரிகள் கடையடைப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குரேஷி இறைச்சி வியாபாரிகள் சங்கத்தின் தலைமையில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கோவா முதல்வர் பிரமோத் சாவந்துக்கு அவர்கள் எழுதியக் கடிதத்தில் சட்டப்பூர்வமாக மாட்டிறைச்சி விற்கும் கடைகள் மீது வலதுசாரி ஹிந்து அமைப்புகள் தொடர்ச்சியாகத் தாக்குதல்கள் நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிக்க | ஜாமா மசூதி ஆய்வறிக்கை ஜனவரியில் தாக்கல் செய்யப்படும்: சம்பல் நீதிமன்ற ஆணையர்
“மார்கா பகுதியில் சமீபத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசு எங்களுக்கு பாதுகாப்புத் தரவேண்டும். காவல்துறையினரிடம் இதுதொடர்பாக புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வியாபாரிகளின் பாதுகாப்புக்கு அரசு உத்தரவாதம் கொடுக்கும்வரை கடையடைப்புப் போராட்டம் தொடரும்” என்று கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்எல்ஏ கார்லாஸ் அல்வராஸ் ஃபெரேரா கூறுகையில், “பசுப் பாதுகாவலர்களின் தாக்குதல்கள் மாநிலம் முழுக்க நடைபெற்று வருகின்றன. இறைச்சிக் கடைகள் மட்டுமின்றி எந்த நிறுவனம் இவ்வாறு தாக்கப்பட்டாலும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
இந்தக் கும்பல்கள் வீடுகளுக்குள்ளும் தீடீரென்று நுழைந்து மாட்டிறைச்சி இருக்கிறதா என ஃப்ரிட்ஜ் மற்றும் சமையலறையில் சோதனை செய்கின்றனர். இது அத்துமீறலாகும். இவ்வாறு நுழைய அவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?
இதையும் படிக்க | வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைவோம்: கேரள முதல்வரின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!
பசுப் பாதுகாவலர் என்று சொல்லிக்கொள்ளும் கும்பல்களுக்கு எந்த அதிகாரமும் இல்லாவிட்டாலும் அவர்கள் தங்களை கடைகளில் சோதனை செய்ய அனுமதிக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். அங்கீகரிக்கப்பட்ட எந்த அமைப்பும் இல்லாத இவர்களுக்கு கடைகளுக்குள் நுழைய எந்த உரிமையும் இல்லை” என்று கூறினார்.
கோவா முதல்வர் சாவந்த் நேற்று (டிச. 23) பேசுகையில், ”மாநில அரசு நடத்தும் இறைச்சி மையம் மாட்டிறைச்சித் தட்டுப்பாட்டைப் போக்கும். இறைச்சி மையங்களில் சுத்தமான மாட்டிறைச்சி வழங்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.
அரசின் தரவுகளின்படி, கோவா மாநிலத்தில் நாள்தோறும் 20 முதல் 25 டன் வரையிலான மாட்டிறைச்சி விற்பனை நடைபெறுகிறது. பண்டிகை மற்றும் விடுமுறைக் காலங்களில் இது அதிகரிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.