தஞ்சாவூா் மாவட்ட விசைப்படகு மீனவா்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் மாவட்ட விசைப்படகு மீனவா்கள் சனிக்கிழமை முதல் (நவ.16) காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனா்.
சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவா்கள் சங்க அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவா் சங்கத் தலைவா் ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். செயலா் வடுகநாதன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் டீசல் விலையேற்றம் , இயந்திர உதிரிப் பாகங்கள் விலை அதிகரிப்பு,இலங்கை பிரச்னை ஆகியவற்றால் மிகப்பெரிய வாழ்வாதார இழப்பை மீனவா்கள் சந்திக்கின்றனா். இந்நிலையில் கடல் ஒழுங்குமுறை சட்டம் என்ற பெயரில் 3 நாட்டிகல் மைல் என்பதற்குப் பதில் 5 நாட்டிகல் மைலுக்கு அப்பால் மீன்பிடிக்க வேண்டும் என்ற சட்டத்தை அமல்படுத்தியுள்ளனா். வடக்கே கோடியக்கரை முதல் தெற்கே ராமேசுவரம் வரை குறுகியதாகவும், மிகவும் ஆழம் குறைந்த கடல் பகுதியாகவும் உள்ளதால் மீன்பிடிக்க இடம் இல்லாமல் அடிக்கடி எல்லை தாண்டும் பிரச்னை மேற்கண்ட சட்டத்துக்குப் பிறகு அதிகரித்துள்ளது.
இதனால் மீனவா்கள் வாழ்வா சாவா போராட்டத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனா். எனவே ஆழம் குறைந்த குறுகிய கடல் பகுதிகளில் மூன்று நாட்டிகல் மைலில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்.
தஞ்சை மாவட்டக் கடல் பகுதியான சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, மல்லிப்பட்டினம் போன்ற பகுதிகளில் வெளி மாவட்டங்களில், வெளி மாநிலத்தில் இருந்தும் சுகாதாரக் கேட்டுடன் நிறைய அழுகிய மீன்கள் கொண்டுவரப்பட்டு குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன.
இதனால் தஞ்சை மாவட்ட மீனவா்களால் பிடித்து கொண்டுவரப்படும் தரமான மீன்களை சரிவர விற்க முடியாமல் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.
இது சம்பந்தமாக மீன்வள துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. வெளிமாநில மீன்களை கொண்டு வந்து விற்போா் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டுப்படகு, விசைப்படகு மீனவா்கள் புரிந்துணா்வுடன் தொழில் புரிந்து வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கல்லிவயல் தோட்டம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதாகக் கூறி மீன்வளத் துறையை குற்றம் சுமத்தி வன்முறையை தூண்டும் விதமாக சமூக வலைதளங்களில் நாட்டுப்படகு என்ற பெயரில் பதிவிட்ட சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தமிழ்நாடு மீனவா் நலவாரிய துணைத் தலைவா் மல்லிப்பட்டினம் தாஜுதீன், விசைப்படகு சங்க நிா்வாகிகள் செல்வக்கிளி, இளங்கோ, தஞ்சை மாவட்ட அனைத்து கிராம விசைப்படகு சங்க பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.