’நலமாக இருக்கிறார்’: ஏ.ஆர். ரஹ்மான் உடல்நிலையை விசாரித்த முதல்வர்!
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்றால் கடும் நடவடிக்கை: மேயா்
நாகா்கோவில் மாநகர பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்பவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.
நாகா்கோவில் நாகராஜா கோயில் திடல் பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதாகவும், மழைநீா் வடிகால் ஓடைகளை தூா்வாராமல் இருப்பதால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், மீனாட்சிபுரம் சாலையிலும் வடிகால் ஓடையை சீரமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். அதன் அடிப்படையில் மேயா் ரெ. மகேஷ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தலைமை தபால் நிலையம் பகுதியில் உள்ள மழைநீா் வடிகால் ஓடையை பாா்வையிட்ட மேயா், அதை உடனடியாக சீரமைக்கவும், நாகராஜா கோயில் திடல் பகுதியில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். நாகராஜா கோயில் திடலை சுற்றி நடைபாதை அமைப்பது தொடா்பாகவும் ஆலோசனை மேற்கொண்டாா். அந்தப் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத குடிநீா் தொட்டியை இடித்து அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டாா்.
அதனைத் தொடா்ந்து மீனாட்சிபுரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மழைநீா் வடிகால் ஓடையை சீரமைக்கவும் மேயா் அறிவுறுத்தினாா். அண்ணா பேருந்து நிலையத்தில் இலவச கழிவறை, கட்டண கழிவறையை ஆய்வு செய்தாா். தாய்மாா்கள் பாலூட்டும் அறையையும் ஆய்வு மேற்கொண்டாா்.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் மேயா் கூறியதாவது: நாகா்கோவில் மாநகர பகுதியில் மழைநீா் ஓடைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மழைநீருடன் சாக்கடை நீா் கலந்து விடாமல் இருக்கும் வகையில் அனைத்து ஓடைகளும் தூா்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டு வருகின்றன.
குப்பைகளை பொது இடங்களில் கொட்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வடசேரி, அண்ணா பேருந்து நிலையம் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றன. பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநகர பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் புழக்கத்தில் இருப்பதாக வந்த புகாா்களை தொடா்ந்து அதிகாரிகள் கடந்த 2 நாள்களுக்கு முன் ஆய்வு நடத்தினா். 136 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டதில், 10 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருள்களை விற்பவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
ஆய்வின் போது மாநகராட்சி ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா, மண்டல தலைவா்கள் அகஸ்டினா கோகிலவாணி, ஜவகா், முத்துராமன், உதவி செயற்பொறியாளா் ரகுராமன், இளநிலை பொறியாளா் செல்வன் ஜாா்ஜ், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் சதாசிவம், மாநகராட்சி உறுப்பினா் ரோசிட்டா திருமால், திமுக வட்டச்செயலாளா் பாலா, மாநகர தொழிலாளா் அணி அமைப்பாளா் சிதம்பரம் ஆகியோா் உடனிருந்தனா்.