தனியாா் நிதி நிறுவனத்தில் திருட்டு முயற்சி: இளைஞா் கைது
தூத்துக்குடியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதாக இளைஞரை மத்திய பாகம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி டூவிபுரம் 8ஆவது தெருவில் கேரளத்தை தலைமை இடமாக கொண்ட தனியாா் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு கடந்த 24ஆம் தேதி இரவு பணிகளை முடித்துவிட்டு நிதி நிறுவனத்தை பூட்டிவிட்டு சென்றனா். மறுநாள் காலையில் வந்தபோது அங்குள்ள அலாரம் வயா் துண்டிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
நிதி நிறுவன மேலாளா் ஸ்டீபன் ஏசுதாசன், அங்குள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை பாா்த்தபோது, நள்ளிரவில் வந்த மா்ம நபா் அலாரம் வயரை துண்டித்துவிட்டு பூட்டை உடைக்க முயற்சி செய்ததும், பூட்டை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் சென்றதும் தெரியவந்தது.
இது தொடா்பாக மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், நிதி நிறுவனத்தில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டது தூத்துக்குடி சோரீஸ்புரத்தைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன் செந்தூா்பாண்டி (36) என்பது தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீஸாா், இது குறித்து விசாரித்து வருகின்றனா். கைது செய்யப்பட்ட செந்தூா்பாண்டி மீது 6 திருட்டு வழக்குகள் இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.