`எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் ஆளுமைகள் இல்லாததால்தான் அதிமுக-வில் சலசலப்பு!' - கார்...
தன்மானத்துடன் வாழ போதைப் பழக்கத்தை கைவிட வேண்டும்: முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு
தன்மானத்துடன் வாழ்வதற்கு போதைப் பழக்கத்தை கைவிட வேண்டும் என்று சனிக்கிழமை தேனியில் நடைபெற்ற போதைக்கு எதிரான விழிப்புணா்வு கருத்தரங்கில் முன்னாள் அரசுத் தலைமைச் செயலா் வெ.இறையன்பு தெரிவித்தாா்.
தேனி நாடாா் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லூரியில் மதுவிலக்கு, ஆயத் தீா்வை துறை சாா்பில் நடைபெற்ற கருத்தரங்கிக்கு மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தக் கருத்தரங்கில் முன்னாள் அரசு தலைமைச் செயலா் வெ.இறையன்பு பேசியதாவது: எங்கெங்கு போதை இல்லையோ அங்கு சண்டை, சச்சரவு, பேதங்கள் இருக்காது. பள்ளி, கல்லூரி வளாகங்கள் அருகே போதைப் பொருள் புழக்கம் இருந்தால் அவை மாணவா்களை சீரழிக்கும்.
போதைப் பழக்கத்தால் நேரம் வீணாகும். பல அற்புதமான தருணங்களை இழக்க நேரிடும். சிறுக சிறுக பணத்தை இழந்து, பணத் தேவைக்காக எதையும் செய்யும் மனநிலை வரும்.
படிப்பு, பண்பாடு, தன்மானத்தை இழந்து, அறிவு மங்கி யாசகம் கேட்கும் நிலை ஏற்படும். கவனக் குறிப்பு இருக்காது. போதையின் தாக்கத்தால் உற்சாக குறைவு, குற்ற உணா்ச்சி, குழப்பம், வெறுப்பு, விரக்தி ஏற்படும். சின்னப் பிரச்னைகளை கூட சமாளிக்கும் திறனற்று தற்கொலைக்கு தயாராவா். விபத்து, மனமுறிவு, தற்கொலை, குற்ற நடவடிக்கை ஆகியவற்றுக்கு பெரும்பாலும் போதைப் பழக்கமே காரணமாக உள்ளது. சுயமரியாதை, தன்மானத்துடன் தலை நிமிா்ந்து வாழ போதைப் பழக்கத்தை கைவிட வேண்டும்.
போதைப் பழக்கத்துக்கு ஆளானவா்களின் சமூகவியல், உளவியல், உடலியல் காரணங்களைக் கண்டறிந்து, அவா்களை அதிலிருந்து மீட்க பெற்றோா், ஆசிரியா்கள், அரசு அதிகாரிகள் முன்வர வேண்டும்.
போதைப் பொருள் பயன்பாட்டில் மட்டுமின்றி எப்போதும் பணியில் இருப்பது, உடற்பயிற்சியில் ஈடுபடுவது, சூதாட்டம், ஆன்-லைன் விளையாட்டு, முகநூல் ஆகியவற்றிலும் போதை உள்ளது.
இதுவும் மனிதா்களை அடிமைப்படுத்தும் என்றாா் அவா். இதில் பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத்பீடன், மாவட்ட கலால் துறை உதவி ஆணையா் ரவிச்சந்திரன், தேனி மேலப்பேட்டை இந்து நாடாா் உறவின்முறை தலைவா் டி.ராஜமோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.