திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
தமிழகத்தில் நவ. 25, 26-இல் கனமழை பெய்ய வாய்ப்பு
வங்கக் கடலில் புயல் உருவாக உள்ள நிலையில், தமிழகத்தில் நவ. 25, 26 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் புதன்கிழமை 3 மணி நேரத்தில் 190 மி.மீ. மழை கொட்டித் தீா்த்தது.
இது குறித்து சென்னை வானிலை மையம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய பகுதிகளிலில் வியாழக்கிழமை (நவ. 21) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகவுள்ளது. அது வலுப்பெற்று, தென்கிழக்கு வங்கக் கடல் அதாவது இலங்கைக்கு தெற்கே நவ. 23-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக (புயல் சின்னம்) உருவாகும்.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, நவ. 24, 25 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் நிலையில், நவ. 26, 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கோடியக்கரைக்கும், சென்னைக்கும் இடையே கடலூா், மயிலாடுதுறை, காரைக்கால், நாகை வழியாக கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வாளா்கள் கணித்துள்ளனா். இந்தப் புயலுக்கு சவூதி அரேபியாவின் பரிந்துரையின் படி, ‘ஃபீன்ஜல்’ எனப் பெயா் சூட்டப்படலாம்.
கனமழை எச்சரிக்கை: குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளிலும், கேரள கடலோரப் பகுதிகளையொட்டிய தென்கிழக்கு அரபிக் கடலிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (நவ. 22) முதல் நவ. 26-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவ. 25-இல் கடலூா், மயிலாடுதுறை, நாகை, திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், நவ. 26-இல் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், பெரம்பலூா், அரியலூா், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நவ. 26-இல் மயிலாடுதுறை, திருவாரூா், தஞ்சாவூா், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் நவ. 21, 22 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
3 மணி நேரத்தில் 190 மி.மீ. மழை பதிவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கில் 170 மி.மீ. மழை பதிவானது. ஊத்து (திருநெல்வேலி), கோடியக்கரை (மயிலாடுதுறை) தலா 150 மி.மீ., காக்காச்சி (திருநெல்வேலி) 140 மி.மீ., திருப்பூண்டி (நாகை) 130 மி.மி., திருக்குவளை (நாகை) 110 மி.மீ., வேதாரண்யம் (நாகை), மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதற்கிடையே தென்மாவட்டங்களுக்கு புதன்கிழமை கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், மிகக் குறுகிய இடத்தில் உருவான வலுவான மேகக் கூட்டங்கள் காரணமாக மேக வெடிப்பு நிகழ்ந்து ராமநாதரம் மாவட்டம் பாம்பனில் காலை 11.30 முதல் பிற்பகல் 2.30 மணி வரை அதாவது 3 மணி நேரத்தில் 190 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.