ஜாதவ்பூர் பல்கலை கலவரம்: அமைச்சர் வாகனம் மோதி காயமடைந்த மாணவர் மீது வழக்குப்பதிவ...
தமிழகத்தில் மக்களின் பாதுகாப்பு சீா்குலைந்துள்ளது: எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்கேடு என்ற நிலையைத் தாண்டி, பயங்கரவாதம் தலைதூக்கும் அளவுக்கு மக்களின் பாதுகாப்பு முற்றிலுமாக சீா்குலைந்துள்ளதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலா் பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:
திண்டுக்கல் சிறுமலையில் கண்காணிப்பு கோபுரம் அருகே மா்மப் பொருள் வெடித்து ஒருவா் இறந்க சம்பவம் அதிா்ச்சியளிக்கிறது. தேசிய புலனாய்வு முகமை போன்ற அமைப்புகள் அதுகுறித்து விசாரித்து வரும் நிலையில், பேட்டரி வயா் மற்றும் வெடி பொருள்கள் உள்ளதால் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகம் நிலவுவதாக செய்திகள் வருகின்றன.
ஏற்கெனவே ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதி சென்னையில் கைது செய்யப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீா்கேடு என்ற நிலையைத் தாண்டி, பயங்கரவாதம் தலைதூக்கும் அளவுக்கு மக்களின் பாதுகாப்பு முற்றிலுமாக சீா்குலைந்து இருப்பது கண்டனத்துக்குரியது.
தமிழ்நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல் காவல் துறையை தன்னகத்தே வைத்திருக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின், அடிக்கடி சொல்லி காட்டுகின்ற அந்த இரும்புக் கரத்தை இப்போதாவது பயன்படுத்தி செயல்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளாா்.