தமிழகத்தில் மதவாதம் எங்கு இருக்கிறது? மு.க. ஸ்டாலின் - வானதி சீனிவாசன் காரசார வாதம்!
தமிழ்நாட்டில் மதவாத எதிர்ப்பு சக்தி எங்கு இருக்கிறது? எப்படி, எந்த சூழலில் இருக்கிறது என்று சொல்லுங்கள்? என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று, கோவையில் காரில் குண்டுவெடித்த சம்பவத்தைக் குறிப்பிட்டு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசினார். மேலும், ஆடிட்டர் ரமேஷ் கொலை பற்றி சுட்டிக்காட்டிப் பேசியிருந்தார்.
இதற்கு பதிலளித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழகத்தில் மதவாத சக்திகள் எந்த ரூபத்திலும் உள்ளே நுழைய முடியாது என்றும், கோவையில் நடந்த சம்பவம் உண்மைதான், ஆனால் உடனடியாக அமைதி நிலைநிறுத்தப்பட்டது என்றும் தெரிவித்தார்.
பேரவையில் பேசிய வானதி சீனிவாசன், ஆடிட்டர் ரமேஷ் கொலை பற்றி சுட்டிக்காட்டிப் பேசியிருக்கிறார். ஆடிட்டர் ரமேஷ் கொலை அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்தது என்று முதல்வர் பதிலளித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் மதவாத எதிர்ப்பு சக்தி எங்கு இருக்கிறது? எப்படி எந்த சூழலில் இருக்கிறது என்று சொல்லுங்கள். உங்களுடைய பாஜக ஆளும் மாநிலங்களில் என்னவெல்லாம் நடந்துகொண்டிருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும். எந்தக் காரணத்தையும் கொண்டு தமிழகத்துக்குள் மதவாதம் நுழைய முடியாது. காஷ்மீர் போன்று தமிழ்நாட்டில் எதுவும் நடக்காது. காஷ்மீர் பிரச்னையில் கூட மத்திய அரசின் பாதுகாப்புக் குறைபாடு குறித்து நாங்கள் பேசவில்லை. மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம் என்றுதான் பேசியிருந்தோம் என்றார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், மத்தியில் ஆளும் பாஜக அரசிடம் பேசி தமிழகத்துக்குத் தேவையான நிதியைப் பெற்றுக் கொடுக்குமாறும் வானதி சீனிவாசனை வலியுறுத்தினார்.