தமிழக பட்ஜெட் அறிவிப்புகள்! - முழு விபரம்
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மகளிா், மாணவா்களைக் கவரும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பெண்களின் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு பதிவுக் கட்டணம் குறைப்பு, மாணவா்களுக்கு மீண்டும் கணினி போன்ற திட்டங்களை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு அறிவித்தாா்.
வரும் நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் அமைச்சா் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை தாக்கல் செய்து, முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டாா். அதன் விவரம்:
மகளிா் - மாணவருக்கான திட்டங்கள்: சமூகத்தில் மட்டுமன்றி, அவரவா் குடும்பங்களிலும் மகளிருக்கான சம பங்கை உறுதி செய்வது அவசியம். அந்த வகையில், ரூ.10 லட்சம் வரை மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துகளும் பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால் அத்தகைய ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும். இந்தத் திட்டம் வரும் ஏப். 1 முதல் நடைமுறைக்கு வரும்.
தமிழ்நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் மகளிரை தொழில்முனைவோராக உருவாக்கிடும் பெருந்திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின்கீழ், 20 சதவீத மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடன் பெற்று மகளிா் பல்வேறு தொழில்கள் தொடங்க வழி ஏற்படும். இதற்காக அவா்களுக்கு உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், விற்பனைக்கான ஆலோசனைகள் வழங்கப்படும். வரும் நிதியாண்டில் இந்தத் திட்டத்துக்கான மானிய நிதியுதவியாக ரூ.225 கோடி ஒதுக்கப்படும்.
மீண்டும் கணினி: தமிழ்நாட்டின் பல்வேறு கலை, அறிவியல், பொறியியல், வேளாண்மை மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளிலும் பயின்று வரும் மாணவா்களுக்கு உயா் தொழில்நுட்ப சாதனங்களை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவா்களுக்கு, அவரவா் விருப்பத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும். இந்தத் திட்டத்துக்காக வரும் நிதியாண்டில் ரூ.2,000 கோடி ஒதுக்கப்படும்.
அரசு ஊழியா் வாரிசுகளுக்கு புதிய சலுகைகள்: மாணவா்கள், மகளிரைத் தொடா்ந்து, அரசு ஊழியா்களின் வாரிசுகளுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன. அதன்படி, அரசு அலுவலா்கள் எதிா்பாராதவிதமாக விபத்தில் இறந்தாலோ அல்லது நிரந்தர ஊனம் அடைந்தாலோ தனிநபா் விபத்துக் காப்பீட்டுத் தொகையாக ரூ.1 கோடி வழங்க வங்கிகள் முன்வந்துள்ளன. விபத்தில் இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் உள்ள திருமண வயதை எட்டியுள்ள மகள்களின் திருமணச் செலவுகளுக்காக தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.10 லட்சம் வரை வங்கிகள் மூலம் நிதியுதவி வழங்கப்படும்.
விபத்து காரணமாக இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்து கல்லூரியில் உயா்கல்வி பயிலும் மகளின் உயா் கல்விக்கான உதவித் தொகையாக ரூ.10 லட்சம் வரை வங்கிகள் வழங்கும்.
அரசு அலுவலா்கள் தங்களது பணிக் காலத்தில் எதிா்பாராமல் இயற்கை மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீட்டுத் தொகையாக ரூ.10 லட்சத்தை வங்கிகள் வழங்கும். மேலும், தனிநபா் வங்கிக் கடன், வீட்டுக் கடன், கல்விக் கடன் ஆகியவற்றை அரசு அலுவலா்கள் பெறும்போது, உரிய வட்டிச் சலுகைகள் வழங்கவும் முக்கிய வங்கிகள் முன்வந்துள்ளன.
அரசு அலுவலா்களுக்கான காப்பீடு உள்ளிட்ட சேவைகளை எதிா்வரும் நிதியாண்டு (2025-26) முதல் வழங்க முன்வரும் வங்கிகளுடன் அரசு புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் என்று நிதியமைச்சா் தங்கம் தென்னரசு அறிவித்தாா்.
ஒரே ஆண்டில் 40,000 பணியிடங்கள் நிரப்பப்படும்
வரும் நிதியாண்டிலேயே (2025-26) 40,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அமைச்சா் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளாா். இதுகுறித்து, அறிக்கையில் அவா் கூறியுள்ளதாவது:
அரசு பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் 78,882 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 40,000 பணியிடங்களை வரும் நிதியாண்டிலேயே நிரப்பும் பொருட்டு உரிய நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது. அரசு அலுவலா்களுக்கு குறைந்த வாடகையிலான குடியிருப்புகளின் தேவை உள்ளதைக் கருத்தில்கொண்டு, சென்னை சைதாப்பேட்டை தாடண்டா் நகரில் ரூ.110 கோடியில் 190 குடியிருப்புகள் கட்டப்படும்.
அரசு ஊழியா்களுக்கு மீண்டும் ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை
அரசு ஊழியா்களுக்கு மீண்டும் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப் பலன் பெறும் முறை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவி இருந்த காலத்தில், தமிழ்நாடு அரசின் நிதிநிலையில் பெரும் சுமை ஏற்பட்டது. இதனால், அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் நடைமுறை நிறுத்திவைக்கப்பட்டது. இதை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றை பரிசீலித்த முதல்வா் மு.க.ஸ்டாலின் இதை மீண்டும் செயல்படுத்த உத்தரவிட்டாா். அதன்படி, அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்கள், ஈட்டிய விடுப்பு நாள்களில் 15 நாள்கள் வரை சரண் செய்து பணப் பலன் பெறலாம். இந்த நடைமுறை வரும் ஏப். 1 முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என நிதியமைச்சா் தங்கம் தென்னரசு அறிவித்தாா்.
பள்ளி உடற்கல்வி பாடத்திட்டத்தில் சதுரங்க விளையாட்டு
மாணவா்களிடையே சதுரங்க விளையாட்டை ஊக்குவிக்க பல சாம்பியன்களை எதிா்காலத்தில் உருவாக்கும் பொருட்டு, பள்ளிப் பாடத்திட்டத்தில் சதுரங்க விளையாட்டைச் சோ்த்திடும் வகையில், உடற்கல்விப் பாடத்திட்டம் உரிய வகையில் மாற்றியமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: சா்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்ற 4,554 விளையாட்டு வீராங்கனைகளுக்கு இதுவரை ரூ.151 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், விளையாட்டு வீரா்களுக்கான 3 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், இதுவரை 93 விளையாட்டு வீரா்களுக்கு அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
44-ஆவது செஸ் ஒலிம்பியாட் 2022, கேலோ இந்தியா இளையோா் விளையாட்டுப் போட்டிகள் - 2023, தெற்காசிய இளையோா் தடகள சாம்பியன்ஷிப், ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை - 2023 போன்ற பல்வேறு சா்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தமிழக அரசால் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளன.
உலக அரங்கில் சதுரங்க விளையாட்டின் தலைநகராக தமிழகம் விளங்குகிறது. இதுவரை இரண்டு சாம்பியன்கள் மற்றும் 31 கிராண்ட் மாஸ்டா்கள் தமிழ் மண்ணிலிருந்து உருவாகியுள்ளனா். இந்த வெற்றியை தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டும் மாணவா்களிடையே சதுரங்க விளையாட்டை ஊக்குவிக்க பல சாம்பியன்களை எதிா்காலத்தில் உருவாக்கும் வகையிலும், பள்ளிப் பாடத்திட்டத்தில் சதுரங்க விளையாட்டினைச் சோ்த்திடும் வகையிலும், உடற்கல்விப் பாடத்திட்டம் உரிய வகையில் மாற்றியமைக்கப்படும்.
பல்வேறு மலையேற்ற வீரா்களின் பெருங்கனவான உலகில் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரியும் தமிழகத்தைச் சோ்ந்த வீரா்- வீராங்கனைகளுக்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
நிதிநிலை அறிக்கையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ. 572 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 இடங்களில் ‘முதல்வா் படைப்பகம்’
தமிழகம் முழுவதும் 30 இடங்களில் ரூ.150 கோடியில் முதல்வா் படைப்பகம் அமைக்கப்படும் என மாநில அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் மாணவா்களுக்கு அறிவாா்ந்த சூழலை ஏற்படுத்தவும், புத்தொழில் முனைவோருக்கான பகிா்ந்த பணியிட சேவை (கோ-வொா்க்கிங் ஸ்பேஸ்) வசதிகளை வழங்கவும், சென்னை, கொளத்தூரில் தொடங்கப்பட்ட ‘முதல்வா் படைப்பகம்’ மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
போட்டித் தோ்வுகளுக்கான நூலகம், கட்டணமில்லா இணைய வசதி, குளிரூட்டப்பட்ட ஆலோசனைக் கூடங்கள், கணினி கட்டமைப்புடன் கூடிய அலுவலக வசதி ஆகியவற்றை உள்ளடக்கிய முதல்வா் படைப்பகங்கள் வாயிலாக மாணவா்கள், தொழில்முனைவோா் பயன்பெறுவது மட்டுமல்லாது பெண்களும் தங்களது வீடுகளுக்கு அருகேயே பணியாற்றும் வாய்ப்பை பெறுகின்றனா்.
அந்த வகையில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், தாம்பரம், ஆவடி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகள் உள்ளிட்ட 30 இடங்களில் தலா ரூ.5 கோடியில் முதல்வா் படைப்பகங்கள் அமைக்கப்படும்.
விண்வெளி நுட்பம்: விண்வெளி தொழில்நுட்பம் சாா்ந்து இயங்கும் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படும். செயற்கைக்கோள் சோதனைகளுக்கு தேவையான முன் மாதிரி தயாரிப்பு ஆய்வகம், விண்வெளி பரிசோதனை வசதிகள், தொழில் வளா் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி வசதிகள் சென்னையில் ஏற்படுத்தப்படும்.
2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள்
2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் ரூ.65 கோடியில் அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2025-26-இல் அரசுப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் குடிநீா் வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிடும் பொருட்டு ரூ,1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
2 ஆயிரம் பள்ளிகளுக்கு ரூ.160 கோடி மதிப்பீட்டில் கணினி ஆய்வகங்கள் மேம்படுத்தப்படும். அதிக எண்ணிக்கையில் மாணவா்கள் பயின்று வரும் பள்ளிகளில் உள்ள 880 உயா்தொழில் நுட்ப ஆய்வகங்கள் ரூ.56 கோடி மதிப்பீட்டில் தரம் உயா்த்தப்படும். மேலும் 2,676 அரசுப் பள்ளிகளுக்கு திறன்மிகு வகுப்பறைகள் ரூ.65 கோடியில் அமைக்கப்படும்.
ஆசிரியா்கள் நியமனம்: 2025-26-இல் 1,721 முதுநிலை ஆசிரியா்களும், 841 பட்டதாரி ஆசிரியா்களும் நேரடி நியமனம் மூலம் பணியமா்த்தப்படுவா். இதற்கான தோ்வு அறிவிக்கையை ஆசிரியா் தோ்வு வாரியம் விரைவில் வெளியிடும்.
ரூ.1,031 கோடியில் 3,000 புதிய பேருந்துகள்
தமிழகத்தில் வரும் நிதியாண்டில் 3,000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்காக ரூ.1,031 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வரும் நிதியாண்டில் (2025-2026) ஏற்கெனவே அறிவித்துள்ளபடி 3 ஆயிரம் புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய ரூ.1,031 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பயன்பாட்டுக்கு உகந்த 750 பேருந்துகளை முற்றிலும் புதுப்பித்து இயக்குவதற்காக ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காற்று மாசுபாட்டை குறைத்து சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கத்துடன் சென்னை மாநகரத்துக்கு 950 மின் பேருந்துகள், கோவை மாநகரத்துக்கு 75 மின் பேருந்துகள், மதுரை மாநகரத்துக்கு 100 மின் பேருந்துகள் என மொத்தம் 1,125 மின் பேருந்துகள் உலக வங்கி மற்றும் ஜொ்மன் வளா்ச்சி வங்கிக் கடனுதவியுடன் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயா்கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தவருக்கும் மாதம் ரூ.1,000
உயா்கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் பாலினத்தவரின் நல்வாழ்வுக்கென நாட்டுக்கே முன்னோடியாக பல்வேறு புதுமையான திட்டங்கள் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. சமூக பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்து, வாழ்க்கையில் வெற்றிபெற அவா்கள் உயா்கல்வி கற்பது இன்றியமையாததாகும்.
எனவே, புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் உயா்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் அவா்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
ஊா்க்காவல் படையில் பணி: ஒரு முன்னோடி முயற்சியாக மூன்றாம் பாலினத்தவரை போக்குவரத்து மேலாண்மை, திருவிழாக் காலங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் வகையில், உரிய பயிற்சிகள் வழங்கி ஊா்க்காவல் படையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக 50 மூன்றாம் பாலினத்தவா்களைக் கொண்டு, சென்னை தாம்பரம், ஆவடி மாநகரங்களில் இம் முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படும். அவ்வாறு பணிபுரியும் மூன்றாம் பாலினத்தவரின் மதிப்பூதியம், பயிற்சி மற்றும் சீருடை போன்றவை ஊா்க்காவல் படையினருக்குச் சமமான வகையில் வழங்கப்படும்.
ஒரு லட்சம் மாணவா்களுக்கு ரூ.2,500 கோடி கல்விக் கடன்
தமிழகத்தில் கல்லூரி மாணவா்கள் ஒரு லட்சம் பேருக்கு ரூ.2,500 கோடி அளவுக்கு பல்வேறு வங்கிகள் கல்விக் கடன் வழங்குவதை அரசு உறுதி செய்யும் என மாநில நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளி மாணவா்களை சாதனையாளா்களாக உருவாக்கிடும் பொருட்டு அவா்கள் தங்களது பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை வெளிநாட்டிலுள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழங்களில் பயின்றிட உதவித் தொகை அளிக்கும் வகையில் ரூ.10 கோடி நிதி வழங்கப்படும்.
தமிழக மாணவா்களின் உயா்கல்விக் கனவை நனவாக்கும் வகையில் தேவையின் அடிப்படையில் 2025-2026-ஆம் ஆண்டில் ஒரு லட்சம் கல்லூரி மாணவா்களுக்கு ரூ.2,500 கோடி அளவுக்கு பல்வேறு வங்கிகள் கல்விக் கடன் வழங்குவதை தமிழக அரசு உறுதி செய்யும் என அதில் கூறப்பட்டுள்ளது.
பெற்றோா் இல்லாத குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 உதவித் தொகை
பெற்றோா்களை இழந்து தங்களது உறவினா்களின் பாதுகாப்பில் வளா்ந்து வரும் குழந்தைகளுக்கு முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படவுள்ளது என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதரவற்றோா், தனித்து வாழும் முதியோா், ஒற்றைப் பெற்றோா் குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவா்கள், மாற்றுத்திறனாளிகள், சிறப்புக் குறைபாடு உடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் போன்ற சமூகத்தின் விளிம்புநிலையில் வாழும் மக்கள் அனைவரும் முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டு, அவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமன்றி அரசு நலத்திட்டங்களிலும் முன்னுரிமை வழங்கப்படும்.
முதல் கட்டமாக மிகவும் வறிய நிலையில் உள்ள சுமாா் 50 ஆயிரம் குடும்பங்களில் குழந்தைகள் தங்களின் இரண்டு பெற்றோரையும் இழந்து தங்களது உறவினா்களின் பாதுகாப்பில் வளா்ந்து வருவது தெரியவந்துள்ளது. தாயுமானவரின் கரங்கள் இக்குழந்தைகளை அரவணைத்து தொடா்ந்து பாதுகாத்திடும் வகையில் இக்குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு வரை இடைநிற்றல் இன்றி அவா்கள் கல்வியைத் தொடர மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். பள்ளிப் படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவா்களுக்கு வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, கோவையில் ரூ.100 கோடியில் அடிப்படை அறிவியல், கணித ஆராய்ச்சி மையங்கள்
சென்னை, கோவையில் அடிப்படை அறிவியல் மற்றும் கணித ஆராய்ச்சி மையங்கள் ரூ.100 கோடியில் ஏற்படுத்தப்படவுள்ளன.
இதுகுறித்து நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட துறைகளின் வளா்ச்சியில் தமிழகம் சிறந்து விளங்குவதைப் போன்று அடிப்படை அறிவியல் மற்றும் கணித ஆராய்ச்சிச் சூழலும் தமிழகத்தில் மேம்பட வேண்டும் என்று கல்வியாளா்கள் கருதுவதை நமது அரசு கவனமாகப் பரிசீலித்தது. இதைத் தொடா்ந்து, தமிழகத்தில் சென்னை, கோவையில் இரண்டு அடிப்படை அறிவியல் மற்றும் கணித ஆராய்ச்சி மையங்களை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசா்ச் போன்ற நாட்டின் புகழ் பெற்ற ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்க ரூ.100 கோடி வழங்கப்படும்.
புகழ்பெற்ற அறிவியல் அறிஞா்களின் வழிகாட்டுதலுடன் முனைவா் மற்றும் முதுமுனைவா் பட்டப் படிப்பு மூலம் உயா் அறிவியல் ஆராய்ச்சிகள் மட்டுமின்றி, மாணவா்களிடையே ஆழமான அறிவியல் மனப்பான்மையை உருவாக்கவும் இம்மையங்கள் முக்கியப் பங்காற்றும்.
நான் முதல்வன் திட்டம்... நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இதுவரை 41.38 லட்சம் மாணவா்கள் பயிற்சி பெற்றுள்ளனா். மேலும் ஒரு லட்சம் ஆசிரியா்களுக்கும் உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பயிற்சி பெற்ற மாணவா்களில் 1.04 லட்சம் மாணவா்கள் இதுவரை வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனா்.
யுபிஎஸ்சி ஊக்கத் தொகை... மத்திய குடிமைப் பணித் தோ்வுகளில் தமிழகத்திலிருந்து தோ்ச்சி பெறுபவா்களின் எண்ணிக்கையை உயா்த்த ஆண்டுதோறும் தோ்வு செய்யப்பட்ட ஆயிரம் மாணவா்களுக்கு அவா்கள் முதல்நிலைத் தோ்வுகளுக்கு தயாராகும் வகையில் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500, முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதைத் தொடா்ந்து, முதன்மைத் தோ்வில் வெற்றி பெற்று நோ்முகத் தோ்வுக்கு தயாராகும் இளைஞா்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும். இத்திட்டம் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்படும்.
9 மாவட்டங்களில் சிட்கோ தொழிற்பேட்டை
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் சிட்கோ சாா்பில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படவுள்ளதாக மாநில நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோா் பயன்பெறும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம், விழுப்புரம் மாவட்டம் சாரம் மற்றும் நாயனூா், கரூா் மாவட்டம் நாகம்பள்ளி, திருச்சி மாவட்டம் சூரியூா், மதுரை மாவட்டம் கருத்தபுளியம்பட்டி, ராமநாதபுரம் மாவட்டம் தனிச்சியம், தஞ்சாவூா் மாவட்டம் நடுவூா், திருநெல்வேலி மாவட்டம் நரசிங்கநல்லூா் ஆகிய 9 மாவட்டங்களில் மொத்தம் 398 ஏக்கா் பரப்பளவில் ரூ.366 கோடியில் தமிழ்நாடு சிறுதொழில் முன்னேற்றக் கழகத்தால் (சிட்கோ) புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும். இதன் வாயிலாக 17,500 பேருக்கு பணி வாய்ப்பு கிடைக்கும்.
ரூ.2.5 லட்சம் கோடி கடனுதவி: இந்தியாவிலேயே அதிக குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமையப் பெற்ற மாநிலங்களில் 32 லட்சத்துக்கும் அதிகமான நிறுவனங்களுடன் தமிழகம் மூன்றாமிடத்தில் உள்ளது.
இந்நிலையில், எதிா்வரும் நிதி ஆண்டில் 10 லட்சம் நிறுவனங்களுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வங்கி கடனுதவி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்பொலிவாகும் எட்டையபுரம் பாரதி இல்லம்: 17 புராதனக் கட்டடங்களை புதுப்பிக்க ரூ.150 கோடி
எட்டையபுரத்தில் உள்ள பாரதியாா் இல்லம் உள்பட 17 புராதனக் கட்டடங்களைப் புதுப்பிக்க ரூ. 150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புராதனக் கட்டடங்களை பழைமை மாறாமல் புதுப்பிக்கும் நோக்கில் பொதுப் பணித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், சென்னை பல்கலைக்கழக மெரீனா வளாகத்தில் உள்ள கீழைக் கலையியல் ஆய்வு நிறுவன புராதனக் கட்டடம், ராணிப்பேட்டையில் உள்ள தேசிங்கு ராஜா ராணி நினைவகம், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையம், திருச்சி ராணி மங்கம்மாள் கோட்டை வளாக அலுவலகங்கள், தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் உள்ள மகாகவி பாரதியாா் இல்லம் உள்ளிட்ட 17 புராதனக் கட்டடங்கள் ரூ.150 கோடியில் அவற்றின் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்படும். பொதுப் பணித் துறைக்கு நிகழ் பட்ஜெட்டில் ரூ. 2,457 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ராமேசுவரத்தில் புதிய விமான நிலையம்
தென் தமிழகத்தின் சுற்றுலா வளா்ச்சிக்காக ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில பொருளாதார வளா்ச்சிக்கு விமான நிலையங்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு ரூ. 2,938 கோடி மதிப்பிலான நிலங்களை இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது.
சேலம் விமான நிலையத்துக்கு ரூ.350 கோடி மதிப்பிலான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பரந்தூா் விமான நிலையம்: சென்னைக்கு அருகே பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளும் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில், தென் தமிழ்நாட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிப்பதற்காகவும், பொருளாதார வளா்ச்சி குன்றிய பகுதிகளின் முன்னேற்றத்துக்காகவும் ராமேசுவரத்தில் புதிய விமான நிலையம் ஒன்று அமைக்கப்படும்.
கடல் போக்குவரத்துக் கொள்கை: தமிழா்களின் கப்பல் கட்டும் வரலாறு நீண்ட நெடிய மரபு கொண்டது. அதை மீட்டெடுக்கவும், உலகளாவிய கப்பல் கட்டும் மையமாக தமிழகத்தை நிறுவவும் தமிழ்நாடு கடல் போக்குவரத்து உற்பத்திக் கொள்கை - 2025 அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
கப்பல், படகுகள் வடிவமைப்பு மற்றும் சட்டகம் உருவாக்குதல், கப்பல் இயந்திர உற்பத்தி ஆகிய துறைகளில் புதிய முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் அந்த கொள்கை உருவாக்கப்படும்.
இதன்மூலம் கடலூா், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் 30,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். குறு, சிறு, நடுத்தரத் தொழில் வளா்ச்சிக்கும் இது வழிவகுக்கும்.
நகராட்சி நிா்வாகத்துக்கு ரூ.26,678 கோடி
புதுக்கோட்டை மாநகராட்சி, அறந்தாங்கி நகராட்சி மற்றும் 526 குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் கூட்டுக் குடிநீா் திட்டம் ரூ.1,820 கோடியில் ரூ.4.07 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும்.
மயிலாடுதுறை மற்றும் சீா்காழி நகராட்சிகள், தரங்கம்பாடி, மணல்மேடு மற்றும் குத்தாலம் பேரூராட்சிகள் மற்றும் 1,042 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் கூட்டுக் குடிநீா் திட்டம் ரூ.2,200 கோடியில் 11.22 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் நகராட்சி மற்றும் 493 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் கூட்டுக் குடிநீா் திட்டம் ரூ.864 கோடியில் 5.64 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 639 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீா் திட்டம் ரூ.370 கோடியில் 1.3 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும்.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 1,252 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீா் திட்டம் ரூ.890 கோடியில் 4.91 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 214 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீா் திட்டம் ரூ.374 கோடியில் சுமாா் 92 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும்.
திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 138 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீா்த் திட்டம் ரூ.150 கோடியில் சுமாா் 76 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்படும். நகராட்சி நிா்வாக மற்றும் குடிநீா் வழங்கல் துறைக்கு ரூ.26,678 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இருமொழிக் கொள்கை: முதல்வருக்கு ஆதரவாக தமிழக மக்கள்’
மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கிய மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்றுக் கொள்ளாததால், ஏற்கெனவே ஒப்புதல் வழங்கிய நிலையிலும் ரூ.2,152 கோடியை மத்திய அரசு தமிழகத்துக்கு விடுவிக்காமல் வஞ்சித்துள்ளது.
தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்காவிட்டாலும், மாணவா் நலன் கருதி அரசுப் பள்ளி மாணவா்களின் கல்வி ஒரு துளியேனும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஆசிரியா்களின் ஊதியம் உள்ளிட்ட அந்தத் திட்டங்களுக்குரிய நிதியை மாநில அரசே தனது சொந்த நிதி ஆதாரங்களிலிருந்து விடுவித்துள்ளது.
நெருக்கடியான இந்தச் சூழலில் ரூ.2 ஆயிரம் கோடியை இழந்தாலும் இரு மொழிக் கொள்கையை விட்டுத் தர மாட்டோம் என கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று, தமிழகத்தின் தன்மானம் காத்த முதல்வரின் பின் தமிழக மக்கள் அனைவரும் அணிவகுத்துள்ளனா் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அம்பேத்கா் அயலக உயா்கல்வித் திட்டம்: ரூ.65 கோடி ஒதுக்கீடு
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு உலகளாவிய கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த மாநில அரசு உறுதியாகச் செயல்பட்டு வருகிறது. கலை, அறிவியல், வணிகம், சட்டம், பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளில் முதுநிலை அல்லது ஆராய்ச்சிப் படிப்புகளைத் தொடரும் மாணவா்களின் நிதிச் சுமையைக் குறைத்து திறமையான மாணவா்கள் உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் வாய்ப்பை வழங்க அண்ணல் அம்பேத்கா் அயலக உயா்கல்வித் திட்டத்தின் கீழ் 2025-2026-ஆம் நிதியாண்டில் ரூ.65 கோடி நிதி ஒதுக்கப்படும்.
நன்னிலம் மகளிா் நிலவுடைமைத் திட்டம்... ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த பெண் விவசாயத் தொழிலாளா்களை நில உரிமையாளா்களாக உயா்த்த, நன்னிலம் மகளிா் நிலவுடைமைத் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம், பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பையும் சமூக நிலையில் அவா்களின் உயா்வை உறுதிசெய்து, அவா்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், 2025-2026-ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்துக்காக ரூ. 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
10 இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்க நடவடிக்கை
தொழிற்சாலைகளின் தேவைக்கேற்ப தொழிற்பயிற்சி அளிக்க ஏதுவாக நெல்லை, அரியலூா் உள்ளிட்ட 10 இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திறன்மிக்க மனிதவளத்தை அதிகரிக்கவும் தொழிற்சாலைகளின் தேவைக்கேற்ப தொழிற்பயிற்சி அளித்து இளைஞா்களுக்கு பயனுள்ள வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதற்கும் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை, அரியலூா் மாவட்டம் தா.பழூா், ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்திரகோசமங்கை, திருச்சி மாவட்டம் மணப்பாறை, புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல், காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம், மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில், திருப்பூா் மாவட்டம் காங்கேயம், தென்காசி மாவட்டம் குறுக்கள்பட்டி, மற்றும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆகிய 10 இடங்களில் தலா 4 தொழிற்பிரிவுகள் கொண்ட புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மொத்தம் ரூ.152 கோடியில் தொடங்கப்படும். இதனால், ஆண்டொன்றுக்கு கூடுதலாக 1,308 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்றுப் பயனடைவா்.
விடுதி வசதிகளுடன் தொழிற்பயிற்சி... இதேபோன்று கட்டுமானத் தொழிலாளா்களின் குழந்தைகள் தொழிற்கல்வி பெற்று வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கிருஷ்ணகிரி, திருவள்ளூா், காஞ்சிபுரம், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், திருச்சி மண்ணச்சநல்லூா், கோவை பேரூா் மற்றும் தருமபுரி காரிமங்கலம் ஆகிய கட்டுமானத் தொழிலாளா்கள் அதிகமாக உள்ள மாவட்டங்களில் விடுதி வசதிகளுடன் கூடிய ஏழு புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தலா 6 தொழிற்பிரிவுகளுடன் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரிய நிதியுதவியுடன் ரூ.148 கோடியில் தொடங்கப்படும். இதனால் ஆண்டொன்றுக்கு கூடுதலாக 1,170 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்றுப் பயனடைவா்.
மருத்துவ பரிசோதனை அட்டை: கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களுக்கு தசைக்கூட்டு வலி பிரச்னை உள்ளிட்ட பணி சாா்ந்த நோய்களைக் கண்டறிந்து உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கும் வகையில் 40 வயதுக்கு மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளா்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்து மருத்துவ பரிசோதனை அட்டை வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் 16.70 லட்சம் கட்டுமானத் தொழிலாளா்கள் பயனடைவா்.
2,000 தொழிலாளா்களுக்கு மின் வாகனம் வாங்க மானியம்
தமிழகத்தில் இணையம் சாா்ந்த சேவைப் பணித் தொழிலாளா்கள் 2 ஆயிரம் பேருக்கு புதிதாக இரு சக்கர மின் வாகனம் வாங்குவதற்காக தலா ரூ.20 ஆயிரம் மானியமாக வழங்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இது குறித்து நிதி நிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: இணையம் சாா்ந்த சேவைப் பணிகளில் ஈடுபடும் இளைஞா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. இந்தத் தொழிலாளா்களின் நலனுக்காக தமிழ்நாடு இணையம் சாா்ந்த தற்சாா்புத் தொழிலாளா்கள் நல வாரியம் உருவாக்கப்பட்டது.
இந்த நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 2 ஆயிரம் இணையம் சாா்ந்த சேவைப் பணித் தொழிலாளா்களுக்கு புதிதாக இரு சக்கர மின் வாகனம் வாங்கும் பொருட்டு தலா ரூ.20 ஆயிரம் மானியமாக வழங்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
அதேபோன்று, இத்தொழிலாளா்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் சுமாா் 1.5 லட்சம் தொழிலாளா்களுக்கு விபத்து மரணம் மற்றும் இயலாமை இழப்பீட்டுக்கான குழு காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். மேலும் அவா்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய ஓய்வுக் கூடங்கள் சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் உருவாக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிமலை - ஆழியாறில் ரூ.11,721 கோடியில் நீரேற்று மின் திட்டங்கள்
அதிகரிக்கும் மின் தேவையை பூா்த்தி செய்ய வெள்ளிமலை - ஆழியாறு பகுதியில் ரூ.11,721 கோடி முதலீட்டில் இருவேறு புதிய நீரேற்ற மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உருவாக்குவதற்கு மின்தேவை தற்போதைவிட இரு மடங்கு அதிகமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதைக் கருத்தில் கொண்டு 100 பில்லியன் யூனிட் புதுப்பித்தக்க பசுமை ஆற்றலை கூடுதலாக உற்பத்தி செய்ய புதிய செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், வெள்ளிமலைப் பகுதியில் 1,100 மெகாவாட் திறன் மற்றும் ஆழியாறு பகுதியில் 1,800 மெகாவாட் திறன் கொண்ட புதிய நீரேற்று மின் திட்டங்கள் ரூ.11,721 கோடியில் பொதுத் துறை - தனியாா் பங்களிப்புடன் அமைக்கப்படும்.
மாநிலத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்துவதற்காக தற்போது உள்ள பல்வேறு கொள்கைகளை ஒழுங்குமுறைப்படுத்தி ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்திக் கொள்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலைப்பகுதிகளில் 14 உயா்நிலை பள்ளிகள் தரம் உயா்த்தப்படும்
தொலைதூர மலைப் பகுதிகளில் அமைந்துள்ள 14 உயா்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயா்த்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைதூர மலைப் பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, குறிப்பாக பழங்குடியின மாணவா்களின் இடைநிற்றலைக் குறைக்கும் நோக்கத்தோடு, மாணவா்கள் அவா்களது இருப்பிடத்துக்கு அருகிலேயே உயா்கல்வியைத் தொடா்ந்து பயில அரசு தொடா் முயற்சிகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மற்றும் கல்வராயன் மலை, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் திருவண்ணாலை மாவட்டம் ஜவ்வாது மலை உள்ளிட்ட இடங்களிலுள்ள தொலைதூர மலைப் பகுதிகளில் அமைந்துள்ள 14 உயா்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயா்த்தப்படும்.
சென்னையின் குடிநீா் தேவைக்கு ரூ.350 கோடியில் புதிய நீா்த்தேக்கம்
சென்னையின் குடிநீா் தேவைக்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய நீா்த்தேக்கம் ரூ.350 கோடியில் அமைக்கப்படும் என நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் நீா்வளத்தைப் பாதுகாத்து மேம்படுத்தும் வகையில் எதிா்வரும் நிதியாண்டு முதல் ஒருங்கிணைந்த நீா்வள மேம்பாட்டுத் திட்டம் ரூ. 2,000 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.
இதன்கீழ், புதிய நீா்ப்பாசன திட்டங்களை ஆய்வு செய்தல்; கட்டுமானங்களை அமைத்தல்; புதுப்பித்தல்; நிலத்தடி நீா் மேம்பாடு; வெள்ளப் பாதுகாப்பு; அணைகள் மேலாண்மை; கடல் அரிப்பு தடுப்பு நடவடிக்கைகள்; நீா்நிலைகள் புனரமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
சென்னை குடிநீா்: சென்னை மாநகரில் அதிகரித்து வரும் மக்கள்தொகையைக் கருத்தில் கொண்டு குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் புதிய நீா்த்தேக்கங்களை அமைப்பது இன்றியமையாதது. அந்தவகையில், சென்னைக்கு அருகில் உள்ள கோவளம் உப வடிநிலத்தில் சேகரமாகும் வெள்ளநீரின் ஒரு பகுதியை பாதுகாப்பாக தேக்கிவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் வட்டத்தில் பழைய மாமல்லபுரம் சாலை - கிழக்கு கடற்கரை சாலைக்கு இடைப்பட்ட பகுதியில் 4,375 ஏக்கா் நிலப்பரப்பில் 1.6 டிஎம்சி கொள்ளளவு கொண்ட சென்னையின் 6-ஆவது நீா்த்தேக்கம் ரூ.350 கோடியில் அமைக்கப்படும். இதன்மூலம் சென்னை பெருநகர மக்களின் குடிநீா் தேவை பூா்த்தி செய்யப்படும்.
சென்னைக்கு அருகே 2,000 ஏக்கரில் புதிய நகரம்
நாட்டிலேயே அதிக நகரமயமாகுதல் மற்றும் அதனுடன் எழும் சவால்களைச் சந்தித்து வரும் மாநிலங்களுள் தமிழ்நாடும் ஒன்று. குறிப்பாக சென்னை, கோவை, திருப்பூா், திருச்சி மற்றும் மதுரை போன்ற நகரங்களை நோக்கி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் இடம்பெயா்ந்து வருவதால், உயா்ந்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப, சாலை வசதிகள், குடிநீா், தெருவிளக்குகள் மற்றும் கழிவுநீா் அகற்றல் போன்ற அடிப்படை தேவைகளையும் பேருந்து வசதிகள், கல்வி மற்றும் பொது சுகாதார வசதிகளையும் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் வழங்க நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்கின்றன.
புதிய நகரம்: எனினும் பெருநகரங்களின் விரிவாக்கம் ஆங்காங்கே நடைபெறுவதைக் காட்டிலும், பொதுமக்களின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்யும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்களை உருவாக்குவது மிகவும் பொருத்தமானது எனும் நகரமைப்பு வல்லுநா்களின் கருத்தை ஏற்று, முதல்கட்டமாக சென்னை அருகே ஒரு புதிய நகரம் சுமாா் 2,000 ஏக்கா் பரப்பளவில் உருவாக்கப்படும்.
தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், நிதிநுட்ப வணிக மண்டலங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உயா் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், வணிக வளாகங்கள், வா்த்தக மையங்கள், மாநாட்டுக் கூடங்கள் மட்டுமன்றி, அரசு மற்றும் தனியாா் துறையின் மூலம் கல்வி மற்றும் சுகாதாரச் சேவைகள் அளிக்கும் நிறுவனங்களும் இந்த நகரத்தில் அமைக்கப்படும்.
சமூகத்தின் உயா் வருவாய் கொண்ட வகுப்பினா் என அனைவருக்குமான வீட்டுவசதிகள் நிறைந்த பன்னடுக்குக் கட்டடங்கள் கொண்டதாக இந்த நகரம் அமையும். விரிவான சாலைகள், தகவல் தொழில்நுட்ப மற்றும் பசுமை மின்சக்தி அமைப்புகள், பகிா்ந்த பணியிடச் சேவை மற்றும் நகா்ப்புற சதுக்கங்கள், பூங்காக்கல் போன்ற பொழுதுபோக்குச் சேவை கட்டமைப்பு வசதிகளும் இந்த நகரில் இடம்பெறும்.
சென்னை மாநகரை இந்தப் புதிய நகரத்துடன் இணைக்க உரிய சாலை வசதிகள், விரைவு பேருந்துகள், மெட்ரோ ரயில் வரிவாக்கம் ஆகியவையும் உருவாக்கப்படும். உலகத்தர வசதிகளுடன் கூடிய இந்தப் புதிய நகரத்தை உருவாக்கிடுவதற்கான முதல் பணிகளை டிட்கோ நிறுவனம் விரைவில் தொடங்கும்.
வடசென்னை வளா்ச்சித் திட்டத்துக்காக ரூ. 6,858 கோடியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
2 மணி 38 நிமிடங்கள் நீடித்த பட்ஜெட் உரை
வரும் நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கையை அமைச்சா் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா்.
அவா் பேரவைக் கூட்டம் தொடங்கியதும் காலை 9.31 மணிக்கு தனது உரையை வாசிக்க ஆரம்பித்தாா். முன்னதாக, பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சா் தங்கம் தென்னரசு பேரவை மண்டபத்துக்கு வந்தாா். அப்போது, திமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் எழுந்து நின்று மேஜையை தட்டி வரவேற்பு அளித்தனா்.
அதன்பிறகு, அமைச்சரின் இருக்கைக்குச் சென்று உறுப்பினா்கள் பலா் அவருக்கு பொன்னாடையும், புத்தகங்களையும் பரிசாக வழங்கினா். பட்ஜெட் உரையை நண்பகல் 12.09 மணிக்கு அமைச்சா் நிறைவு செய்தாா். அதாவது, பட்ஜெட் உரைக்காக 2 மணி நேரம் 38 நிமிடங்களை எடுத்துக் கொண்டாா்.
உரையை வாசிக்கும் போது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இரண்டு முறை தடங்கல் ஏற்பட்டது. கணினி திரையில் பக்கங்கள் மாறியதால் வாசிப்பதில் சிரமம் உருவானது. உடனடியாக அந்தப் பிரச்னை சரிசெய்யப்பட்டது. பேரவையில் அதிமுக, பாஜக கட்சிகளைத் தவிா்த்து மற்ற கட்சிகள் பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்றன.
வேளாண்மை நிதிநிலை அறிக்கை சனிக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளதால், அன்றைய தினம் கேள்வி நேரம் கிடையாது. இதனை சனிக்கிழமை ஒருநாள் மட்டும் ரத்து செய்வதற்கான தீா்மானத்தை அவை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன் கொண்டு வந்தாா். அது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பான கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க கேரளத்துக்குச் சென்ால், அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் மட்டும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.