தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்பது வதந்தி: தமிழக அரசு
வரும் 2025ம் ஆண்டு குடியரசு தின விழா அணி வகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்பது வதந்தி என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
குடியரசு நாள் அணிவகுப்பு நிகழ்வில் 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்கின்றன. குஜராத், கர்நாடகா, கோவா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம் உள்பட 15 மாநில அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு நாளன்று மாநில வாரியாக கலாசாராத்தை பிரதிபலிக்கும் விதத்தில் நடைபெறவுள்ள அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழகத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக நேற்று தகவல் வெளியானது.
இதற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக அரசின் தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் விளக்கம் அளித்துள்ளது. அதில், “குடியரசு தினம் : தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்பது வதந்தி.
இதையும் படிக்க: குடியரசு நாள் அணிவகுப்பில் தமிழகம் புறக்கணிப்பு: மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
2025ம் ஆண்டு குடியரசு தின விழாவில், தலைநகர் தில்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிப்பட்டதாகப் பரப்பப்படுகிறது. இது முற்றிலும் தவறான தகவல்.
2025ம் ஆண்டு அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்தி பங்கேற்க இயலாது. தில்லியில் குடியரசு தின அணிவகுப்பில் 15 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அணிவகுப்பு அலங்கார ஊர்தி பங்கேற்க தேர்வு செய்யப்படும்.
ஆனால், சுழற்சி முறையில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அனைத்து மாநிலங்களாலும் எல்லா ஆண்டுகளிலும் பங்கேற்க இயலாது. 2024 அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி பங்கேற்றது. இனி அடுத்த 2026 ஆண்டு அணிவகுப்பிலே பங்கேற்க இயலும்.
ஆனால், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாகத் தவறான தகவல்கள் பரவி வருகிறது. வதந்தியைப் பரப்பாதீர்!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.