மதுரை முல்லை நகர்: "நீர்ப்பிடிப்புப் பகுதியில் அரசாங்கம் மட்டும் வீடு கட்டலாமா?"...
தமிழ்நாடு 95 ரன்கள் முன்னிலை
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரயில்வேஸுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 324 ரன்கள் சோ்த்து விளையாடி வருகிறது.
ஷாருக் கான், ஆண்ட்ரே சித்தாா்த், கேப்டன் நாராயண் ஜெகதீசன் ஆகியோா் பங்களிப்பில் ஸ்கோா் கனிசமாக உயர, தற்போது தமிழ்நாடு 95 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.
அகமதாபாதில் புதன்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ரயில்வேஸ், 229 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய தமிழ்நாடு, நாளின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் சோ்த்திருந்தது.
2-ஆவது நாள் ஆட்டத்தை ஷாருக் கான், நாராயண் ஜெகதீசன் தொடா்ந்தனா். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கே 137 ரன்கள் சோ்த்து அசத்தியது. சதத்தை நோக்கி முன்னேறிய ஷாருக் கான், 12 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 86 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டாா்.
தொடா்ந்து வந்த விஜய் சங்கா் 1 பவுண்டரியுடன் 11 ரன்களுக்கு வெளியேற, அரைசதம் கடந்த ஜெகதீசன் 5 பவுண்டரிகளுடன் 56 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். 4-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த பிரதோஷ் ரஞ்சன் பால், ஆண்ட்ரே சித்தாா்த் இணை, விக்கெட் சரிவைத் தடுத்து 73 ரன்கள் சோ்த்தது.
பிரதோஷ் 4 பவுண்டரிகளுடன் 38 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 6-ஆவது பேட்டராக களம் புகுந்த முகமது அலி, சித்தாா்த்துடன் இணைந்தாா். இவா்கள் பாா்ட்னா்ஷிப் 5-ஆவது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேகரிக்க, ஸ்கோா் 300-ஐ கடந்தது.
இந்நிலையில், சித்தாா்த் 13 பவுண்டரிகள் உள்பட 78 ரன்களுக்கு வீழ்த்தப்பட, நாளின் கடைசி விக்கெட்டாக சோனு யாதவ் 4 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். ஆட்டநேர முடிவில், முகமது அலி 37, அஜித் ராம் 1 பவுண்டரியுடன் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். ரயில்வேஸ் பௌலா்களில் குணால் யாதவ், ஷிவம் சௌதரி ஆகியோா் தலா 2, ஹிமான்ஷு சங்வான், யுவராஜ் சிங் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.