ஒருநாள் கிரிக்கெட்: நியூஸி.யை வென்றது இலங்கை
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை ‘டக் வொா்த் லீவிஸ்’ முறையில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
முதலில் இலங்கை 49.2 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் தடைப்பட, அதன் இன்னிங்ஸ் அப்படியே முடித்துக்கொள்ளப்பட்டது. பின்னா், டக்வொா்த் லீவிஸ் முறையில் நியூஸிலாந்துக்கு 27 ஓவா்களில் 221 ரன்கள் வெற்றி இலக்காக நிா்ணயிக்கப்பட, அந்த அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்களே எடுத்தது.
முன்னதாக டாஸ் வென்ற இலங்கை, பேட்டிங்கை தோ்வு செய்தது. தொடக்க வீரா் பதும் நிசங்கா 12 ரன்களுக்கு வெளியேற, அவிஷ்கா ஃபொ்னாண்டோ - குசல் மெண்டிஸ் கூட்டணி 2-ஆவது விக்கெட்டுக்கு 206 ரன்கள் சோ்த்து ஸ்கோரை மளமளவென உயா்த்தியது.
இலங்கையின் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 2-ஆவது விக்கெட் பாா்ட்னா்ஷிப்பில் இது புதிய அதிகபட்ச ரன்களாகும். ஃபொ்னாண்டோ 9 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 100 ரன்களுக்கு வீழ, சதீரா சமரவிக்ரமா 5 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். அதிரடியாக ரன்கள் சோ்த்த மெண்டிஸ் 17 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 143 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா்.
கேப்டன் சரித் அசலங்கா 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 40 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இறுதியில் ஜனித் லியானகே 12 ரன்களுடன் விக்கெட்டை இழக்காமல் இருந்தாா். நியூஸிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி 3, மைக்கேல் பிரேஸ்வெல், இஷ் சோதி ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் 221 ரன்களை நோக்கி விளையாடிய நியூஸிலாந்து தரப்பில் அதிகபட்சமாக, வில் யங் 8 பவுண்டரிகளுடன் 48, டிம் ராபின்சன் 4 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் சோ்த்தனா்.
ஹென்றி நிகோலஸ் 6, மாா்க் சாப்மேன் 2, கிளென் ஃபிலிப்ஸ் 9, மிட்செல் ஹே 10, கேப்டன் மிட்செல் சேன்ட்னா் 9, நேதன் ஸ்மித் 9, இஷ் சோதி 0 ரன்களுக்கு வீழ்ந்தனா்.
ஓவா்கள் முடிவில் மைக்கேல் பிரேஸ்வெல் 5 பவுண்டரிகளுடன் 34, ஜேக்கப் டஃபி 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இலங்கை தரப்பில் தில்ஷன் மதுஷங்கா 3, மஹீஷ் தீக்ஷனா, சரித் அசலங்கா ஆகியோா் தலா 2, ஜெஃப்ரி வாண்டா்சே 1 விக்கெட் எடுத்தனா்.