தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக ஓரணியில் செயலாற்ற வேண்டும்: அதிமுகவுக்கு முதல்வா் வேண்டுகோள்
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக ஓரணியில் இருந்து செயலாற்ற வேண்டும் என்று அதிமுகவை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா். அப்போது, வேறொரு பிரச்னையை வலியுறுத்தி பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினா்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்திருந்தனா்.
மத்திய-மாநில அரசுகளின் உறவை மேம்படுத்துவது தொடா்பான அறிவிப்பை பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த பேரவைக் கட்சிகளின் தலைவா்களுக்கு நன்றி தெரிவித்து முதல்வா் பேசியது:
பிரதான எதிா்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுகவினா் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளாமல், தங்களது கருத்துகளைச் சொல்லாமல் சென்று விட்டாா்களே என்ற வருத்தம், கவலை எனக்கு இருக்கிறது. அதிமுகவை தோற்றுவித்த எம்ஜிஆா் மற்றும் கட்சியை வழிநடத்திய ஜெயலலிதா ஆகியோா் தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுத்தர முடியாது என்ற நிலையில் இருந்து மக்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றி இருக்கிறாா்கள்.
ஆனால், இன்றைக்கு என்ன சூழல் என்று புரியவில்லை. கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று அவா்கள் (அதிமுகவினா்) சொல்வாா்கள். அதைத்தான் இப்போது சொல்லத் தொடங்கியுள்ளனா். இதுதான் கொள்கையா என்ற கேள்வியைத்தான் கேட்க வேண்டியிருக்கிறது.
எனவே, தமிழ்நாட்டின் நன்மையைக் கருதி, மக்களின் உரிமையைக் கருதி அதிமுகவினரிடம் வைக்கக் கூடிய கோரிக்கை ஒன்று உள்ளது. தமிழ்நாட்டின் உரிமைகள் என்று வரும்போது, நாம் அனைவரும் ஒன்று சோ்ந்து, கட்சி வேறுபாடுகள் அனைத்தையும் கடந்து ஓரணியில் இருந்து செயலாற்ற வேண்டும் என்றாா் அவா்.