இக்லெசியாஸின் ஹாட்ரிக் கோல் வீண்: ரபீனியாவின் அசத்தலால் பார்சிலோனா த்ரில் வெற்றி...
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2025 (கும்பம்)
தமிழ்ப் புத்தாண்டு பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
கிரகநிலை:
ராசியில் சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு, சுக்ரன்(வ), புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன் - சுக ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் என வலம் வருகிறார்கள்
கிரகமாற்றங்கள்:
26-04-2025 அன்று ராகு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
26-04-2025 அன்று கேது பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
02-07-2025 அன்று சனி பகவான் வக்ர நிலை ஆரம்பம்.
17-11-2025 அன்று சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
06-03-2026 அன்று சனி பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11-05-2025 அன்று குரு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
08-10-2025 அன்று குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18-11-2025 அன்று குரு பகவான் வக்ரம் ஆரம்பம்
21-12-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-03-2026 அன்று குரு பகவான் வக்ர நிவர்த்தி
பலன்:
கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நிறைந்த மனதுடன் வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொள்ளும் சக்தி மிக்க கும்பராசி அன்பர்களே!
இந்த வருடம் வீடு மனை வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வ ஏண்ணிய சொத்துக்களால் வருமானம் கிடைக்கும்.
எதிரிகளால் இருந்த தொந்தரவுகளை சமாளிக்க கடந்த காலங்களில் பணம் விரையமானது. அந்நிலை அடியோடு அழிந்து விட்டது. மேலும் நோய்களுக்கான சிகிக்சைக்கோ வீணான செயல்களுக்கோ இந்த வருடம் கிரகநிலை இடம் தராது. கணவன் மனைவி மற்றும் குடும்ப ஒற்றுமை மேலோங்கும். உங்களின் பணத்தேவைகளுக்கு வாழ்க்கைத்துணையின் உதவி நிச்சயம் உண்டு.
தந்தை வழி உறவினர்களால் அனுகூல உதவிகள் எதிர்பார்க்க இயலாது. தொழில் சார்ந்த இனங்களில் நல்ல மேன்மைகளும் சுயதொழில் செய்பவர்கள் புதிய கிளை துவங்குதலும் மற்றும் விஸ்தரிப்பு பணிகள் மேற்கொள்வர்மான சுப பலன்கள் நடக்கும்.
குடும்பத்தில் சுப மங்கள காரியங்கள் நடப்பதற்கு அனைத்து அனுகூலத்தையும் குருபகவான் வழங்குகிறார்.
உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையைக் காண்பீர்கள். உங்களின் வேலைகளை தன்னம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகமாகும். உங்கள் வேலைகளுக்கு உரிய அங்கீகாரத்தை மேலதிகாரிகள் வழங்குவார்கள். சக ஊழியர்கள் சற்று தள்ளியே இருப்பார்கள். அவர்களை உங்களின் அமைதியான குணத்தால் அனுசரித்து நடந்துகொள்வீர்கள். மனதில் இருந்த ஒருவித பயம் நீங்கி தெளிவாகக் காரியமாற்றுவீர்கள்.
தொழிலதிபர்கள்:
உயர்தர ஓட்டல் லாட்ஜ் நடத்துபவர்கள் அபிவிருத்தி பணிகளைச் செய்து முழு உத்வேகத்துடன் செயலாற்றுவார்கள். ரியல் எஸ்டேட் தொழில் நடத்துபவர்களும் அடுக்குமாடி கட்டடங்களை கட்டி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் ஆதாயம் பெற்று முன்னேற்றம் அடைவார்கள் பணப்புழக்கம் தங்கு தடையின்றி இருக்கும். நிறுவனத்தின் புகழ் எட்டுத்திக்கும் பரவும்.
வியாபாரிகள்: வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சுமுகமாக முடியும். கூட்டாளிகள் உங்களிடம் நட்போடு பழகுவார்கள். வியாபாரத்தைப் பெருக்க புதிய சந்தைகளை நாடிச் செல்வீர்கள். உங்களின் வியாபார யுக்திகள் சரியான இலக்குகளை சென்றடையும். சிறிய முதலீடுகளில் பெரிய வருமானத்தைக் காண்பீர்கள். செம்பு பாத்திரங்கள் செம்பினால் செய்யபட்பட் பொருட்களை வியாபாரம் செய்பவர்கள் தொழில் அபிவிருத்தி அடைவார்கள். புதிதாக வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் சுபகாரியங்கள் உண்டாகும். மற்ற வியாபாரிகளுக்கு வழக்கமான நிலை தொடரும்.
கலைத்துறையினர் துறையில் உள்ள நுணுக்கங்களை அறிந்து வைத்துக்கொள்வீர்கள். அவற்றை தகுந்த சமயத்தில் உபயோகித்து வெற்றி பெறுவதற்கு ஏதுவான சூழ்நிலை உண்டாகும். இதனால் பாராட்டுகளும், கௌரவமும் கிடைக்கும். இந்த ஆண்டு உழைப்பை கூட்டிக்கொண்டு செயல்படவும். மற்றபடி புதிய வாய்ப்புகள் தடங்கல் இல்லாமல் வந்துகொண்டிருக்கும். ரசிகர்களின் ஆதரவுடன் சில பயணங்களைச் செய்வீர்கள்.
மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல், தகவல் தொழிற்நுட்பம் மற்றும் விவசாயம் ஆகியோர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். விரும்பிய துறைகளில் எடுத்து படிப்போருக்கு சிறந்த மதிப்பெண்கள் கிடைக்கும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் அறிவுரைகளை உதாசீனப்படுத்தாமல் அதன்படி நடக்கவும். தடைபட்டிருந்த கல்வியைத் தொடர்வதற்கு ஏற்ற வருடமிது.
பெண்கள்: அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தாலும் உயர்அதிகரிகளாலும் இடப்படும் கட்டளைகளை கவனமுடன் செயல்படுத்தி வேலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். சுயதொழில் செய்யும் பெண்கள் தங்கள் தொழில் சிறக்க வேலை தெரிந்த மற்ற பெண்களையும் கூட்டு சேர்த்துச் கொள்ளலாம். கையில் நிறைவான பணம் கிடைக்கும். அனைத்து தரப்பினரிடமும் நற்பெயர் வாங்கும் வகையிலான செயல்களை செய்வீர்கள். உங்கள் பெயரில் வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. கணவனின் ஆயுள் பலம் அதிரிக்கும். மன அமைதியையும் செய்வ அனுகூலத்தையும் பெறுவீர்கள். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்வுகளுக்கு நீங்கள் சேமித்து வைத்த பணத்தை கொடுத்து உதவுவீர்கள்.
அரசியலில் உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும். போட்டிகளை சமாளிப்பீர்கள். உங்களுக்கு எதிர்பார்க்காத பதவி கிடைக்கும். உங்கள் தொண்டர்கள் உங்களுக்காக உழைப்பார்கள். எந்த சவாலையும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் சமாளியுங்கள். எதிரிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். திட்டமிட்டு எதையும் செய்யுங்கள். எதிலும் கவனமாக செயல்படுங்கள். உங்களின் நற்பெயருக்கு பங்கம் வரலாம். தைரியத்தை மட்டும் எபோதுமே இழக்கக் கூடாது. சகோதரர்கள் வகையில் பகை வரலாம். ஆகவே அவர்களுக்காக விட்டுக் கொடுத்து வாழ்தல் நலம்.
அவிட்டம் - 3, 4
இந்த ஆண்டு நீங்கள் செய்த வேலைகளை மற்றவர்கள் செய்ததாகக் கூறி நற்பெயர் எடுத்துக் கொள்வார்கள். கவனம் தேவை. வியாபாரிகள் லாபம் ஈட்டுவதில் கவனம் செலுத்துவர். உடனிருப்பவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு கவனமுடன் செயல்படுவது நன்மை தரும். வியாபாரம் தொடர்பான அலைச்சல் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் லாபம் அடைவீர்கள். உடனிருப்பவர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வேலையில் திருப்தி உண்டாகும். பிள்ளைகளின் கல்வியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
சதயம்
இந்த ஆண்டு எந்த காரியத்திலும் கவனம் தேவை. பெரியவர்களிடம் நற்பெயர் எடுத்து மகிழ்ச்சி காண்பீர்கள். மனம் தெளிவடையும். எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வியாபார போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள்.
பூரட்டாதி - 1, 2, 3
இந்த ஆண்டு குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு திருப்தி தரும். பிள்ளைகள் கேட்பதை வாங்கிக் கொடுத்து சந்தோஷம் காண்பீர்கள். இடம், வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். அதற்கான காரியங்களையும் செய்ய ஆரம்பிப்பீர்கள். பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஆன்மீக தலங்களுக்குச் சென்று பலனடைவீர்கள். வெளியூர் பயணங்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.
பரிகாரம்
செவ்வாய்கிழமை தோறும் முருகனை தரிசித்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
மலர் பரிகாரம்: தினமும் அருகம்புல் மாலை கட்டி வினாயகருக்கு அர்ப்பணிக்கவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தை தினமும் 6 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு
அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6