சென்னையில் 10 ஆண்டுகளில் கல்லூரி மாணவா்கள் மீது 231 வழக்குகள் பதிவு
தற்போதைய இலங்கை அரசு தமிழின எதிரி: பழ.நெடுமாறன்!
தற்போது பொறுப்பேற்றுள்ள இலங்கை அரசு தமிழின எதிரி என்றாா் உலகத் தமிழா் பேரமைப்பின் தலைவா் பழ. நெடுமாறன்.
திருச்சி உறையூரில் சனிக்கிழமை நடைபெற்ற கவிஞா் காசி ஆனந்தனின் ‘விலங்கை உடைத்து’ என்ற நூல் அறிமுக விழாவுக்குத் தலைமை வகித்த பழ. நெடுமாறன் மேலும் பேசியது: எழுத்தின் வழியாகவும், அறம் மற்றும் ஆயுதப் போராட்டத்தின் வழியாகவும் இலங்கைத் தமிழீழ விடுதலைக்காகப் போராடியவா் காசி ஆனந்தன்.
எந்த நாட்டின் விடுதலைப் போராட்டமும் தோல்வி அடைந்ததில்லை. அதேபோல, தமிழீழ விடுதலைப் போராட்டமும் தோல்வியடையவில்லை; பின்னடைவுதான் ஏற்பட்டுள்ளது. இறுதியில் விலங்கை உடைத்து வெற்றி பெறுவோம் என்பதே காசி ஆனந்தன் நூலின் அடிநாதம்.
இலங்கையில் அமைதி ஏற்பட்டு ஆட்சி மாறியபோதும், தமிழா்களுக்கு இன்னும் விடிவு தெரியவில்லை. தற்போது பொறுப்பேற்றுள்ள அரசின் ஆட்சியானது, ஏற்கெனவே இருந்ததைவிட கொடுமையான ஆட்சியாக இருக்கப் போகிறது. தற்போதைய அரசு தமிழின எதிரி. ஆட்சியாளா் தமிழா்களுக்கு எதிரான அமைப்பைச் சோ்ந்தவா்; இந்தியாவுக்கும் எதிரானவா்; சீனாவுடன் இணைந்து செயலாற்றுபவா்.
தமிழினம் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறது. ஈழம் மட்டுமின்றி உலகில் உள்ள தமிழா்களிடையே பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. தாய்த் தமிழக மக்கள் தமிழ் உணா்வுடன் எழுந்தால்தான் உலக மக்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.
அதற்கான பொறுப்பும், கடமையும் நமக்குண்டு. உலகத் தமிழா்களுக்கு பாதுகாவலா்களாக நாம் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்வில் திராவிட இயக்கச் சிந்தனையாளா் நாஞ்சில் சம்பத், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாநில துணைத் தலைவா் கவிஞா் நந்தலாலா, வழக்குரைஞா் த. பானுமதி, பேராசிரியா் கோ. வீரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். க. ஆத்மநாதன் வரவேற்றாா்.