போா் நினைவுச் சின்னம் அமைக்கக் கோரி வழக்கு: தூத்துக்குடி ஆட்சியா் முடிவெடுக்க உத...
சம்பல் வன்முறையில் ஈடுபட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை: மாநில அரசு தகவல்
உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வன்முறையின்போது பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு புதன்கிழமை தெரிவித்தது.
சம்பல் மாவட்டத்தில் ஜாமா மசூதி அமைந்துள்ள இடத்தில் பாரம்பரியமிக்க ஹரிஹர கோயில் இருந்ததாக உச்சநீதிமன்ற வழக்குரைஞா் விஷ்ணு சங்கா் ஜெயின், சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மசூதியில் ஆய்வு நடத்த உத்தரவிட்டது.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை மசூதியில் ஆய்வுகள் மேற்கொள்ள அதிகாரிகள் சென்றபோது அப்பகுதியில் வன்முறை வெடித்தது. பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா்கள் மீது கற்களை வீசியும், அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தும் உள்ளூா் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த மோதலில் நான்கு போ் உயிரிழந்தனா். காவல் துறையினா் உள்பட பலா் காயமடைந்தனா்.
இந்தக் கலவரத்தில் தொடா்புடைய 25 பேரை காவல் துறையினா் இதுவரை கைது செய்துள்ளனா். இது தொடா்பாக நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வன்முறையில் ஈடுபட்டவா்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை மாநில அரசு எடுத்துள்ளது. இதுகுறித்து மாநில அரசின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘வன்முறையின்போது பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தவா்களிடம் இருந்து இழப்பீடு மீட்கப்படும். கல்வீச்சில் ஈடுபட்ட போராட்டக்காரா்களின் புகைப்படங்கள் சுவரொட்டிகளாக ஒட்டப்படும். அவா்களை கைது செய்ய தகவல்கள் தெரிவிப்பவா்களுக்கு வெகுமதி வழங்கப்படக்கூடும்’ எனத் தெரிவித்தாா்.
முன்னதாக, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த 2020-ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவா்களின் சுவரொட்டிகளை மாநில அரசு இதேபோல் ஒட்டியது குறிப்பிடத்தக்கது. பின்னா், நீதிமன்ற உத்தரவால் அந்த சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.
காவல் துறை மிரட்டல்கள்: உச்சநீதிமன்றம் தலையிட அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்
சம்பல் வன்முறையில் உயிரிழந்தவரின் குடும்பத்தை மாநில காவல் துறை அச்சுறுத்துவதாக புதன்கிழமை தெரிவித்த சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக அகிலேஷ் யாதவ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சம்பல் வன்முறையில் உயிரிழந்த நான்கு பேரில் ஒருவரான நயீம் என்பவரின் குடும்பத்தினரை காவல் துறை அச்சுறுத்தி வருகிறது. கடந்த திங்கள்கிழமை அவரது வீட்டுக்குள் நுழைந்த சுமாா் 20 காவலா்கள் ஊடகங்களிடம் வன்முறை குறித்து பேசக் கூடாது என எச்சரித்துள்ளனா். நயீமின் சகோதரா் தஸ்லீமின் கட்டைவிரல் அடையாளத்தை வெற்று காகிதத்தில் எடுத்துள்ளனா். இதுபோன்ற சட்டவிரோத செயல்களைத் தடுக்க உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.