புதிய ரயில் திட்டங்களை செயல்படுத்த ரயில்வே அமைச்சருக்கு எம்.பி. கடிதம்
தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை: மக்களவையில் மத்திய அரசு தகவல்
தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு அரசமைப்புச் சட்ட அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை என்று மக்களவையில் விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் டி. ரவிக்குமார் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளித்துள்ளார்.
அமைச்சர் மேலும் தனது பதிலில், "தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு அரசமைப்புச் சட்ட அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழுவின் 53-ஆவது அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், அவ்வாறு அரசமைப்புச் சட்ட அந்தஸ்து அளிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை. தற்போது அந்த ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களே போதுமானவை. தேசிய சிறுபான்மையினர் ஆணையம் சமர்ப்பிக்கும் ஆண்டறிக்கைகளில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் அந்தந்த மாநில அரசுகளுக்கும், துறைகளுக்கும் சுற்றுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது," என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சரின் பதில் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் எம்.பி. டி. ரவிக்குமார் வெளியிட்ட பதிவில், "தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு அரசமைப்புச் சட்ட அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று சமூக நீதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தனது 53-ஆவது அறிக்கையில் (2017-18) பரிந்துரைத்திருந்தது. அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் ஆன பின்பும்கூட அதன் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க மறுத்து வருகிறது. சிறுபான்மையினருக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்' என தெரிவித்துள்ளார்.