புதிய ரயில் திட்டங்களை செயல்படுத்த ரயில்வே அமைச்சருக்கு எம்.பி. கடிதம்
பேரவைத் தலைவருக்கு எதிரான வழக்கு ரத்து: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
நமது நிருபர்
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு-க்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக செய்தித் தொடர்பாளர் ஆர்.எம். பாபுமுருகவேல் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை மேல்முறையீடு செய்துள்ளார்.
சென்னையில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த நேரத்தில், அதிமுகவை சேர்ந்த 40 எம்எல்ஏ-க்கள் திமுகவில் இணையத் தயாராக இருந்ததாகவும், ஆனால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பெரிய மனதுடன் அதை ஏற்க மறுத்துவிட்டார் எனவும் பேசியிருந்தார்.
இந்தப் பேச்சு அதிமுக எம்எல்ஏக்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகத் தெரிவித்து, அப்பாவு-க்கு எதிராக அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் ஆர்.எம். பாபு முருகவேல் அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பாவு மனுதாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அப்பாவு மீதான குற்ற அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எம்.பாபுமுருகவேல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.