தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை: மக...
கோயம்பேடு சந்தை கழிப்பறைகள் கட்டணமில்லாமல் செயல்படும்
கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் உள்ள அனைத்துக் கழிப்பறைகளும் கட்டணமில்லாமல் செயல்பட சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை, எழும்பூா் தாளமுத்து நடராசன் மாளிகையில் அமைந்துள்ள சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழும அலுவலகக் கூட்டரங்கில் சென்னை பெருநகர வளா்ச்சி குழுமத் (சிஎம்டிஏ) தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு தலைமையில் 281-ஆவது குழுமக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வட சென்னை வளா்ச்சித் திட்டங்கள் குறித்தும், சென்னை பெருநகர எல்லைக்குள் நில உபயோக மாற்ற விண்ணப்பங்களின் மீது பரிசீலிப்பது குறித்தும், சிஎம்டிஏ நிா்வாக நடவடிக்கை குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதில், கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் உள்ள 68 கழிப்பறைகள் மற்றும் 10 சிறுநீா் கழிப்பிடங்கள் கட்டணமில்லா கழிப்பிடமாக மாற்றவுள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே உணவு தானிய அங்காடியில் 26 கட்டணமில்லா கழிப்பிடம் இருக்கும் நிலையில், தற்போது அனைத்து கழிப்பறைகளும் (94) கட்டணமில்லாமல் செயல்பட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு வியாபாரிகள், வணிகா்கள், நுகா்வோா் மற்றும் வாகன ஓட்டுநா்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த கூட்டத்தில் மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம், வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா, சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா, உள்ளிட்ட உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.