தவறுதலாக ராஜினாமா கடிதத்தை அனுப்பிய செல்ல பூனை; வேலை இழந்ததால் புலம்பும் பெண்!
வளர்ப்பு பூனை தவறுதலாக ராஜினாமா கடிதத்தை அனுப்பியதால் வேலையையும், ஆண்டு இறுதியில் கிடைக்கும் போனஸையும் இழந்துள்ளார் சீனாவைச் சேர்ந்த பெண்.
சோகிங் நகரைச் சேர்ந்த 25 வயது பெண், 9 பூனைகளை வளர்த்து வந்துள்ளார். கடந்த ஜனவரி 5ம் தேதி தனது வேலையில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை எழுதிவைத்த அவர், அதை அனுப்ப தயங்கி அப்படியே வைத்துள்ளார்.
அவரது பூனைகளை வளர்க்கவாவது வேலை தேவைப்பட்ட அவர், பண உதவிக்காக வேறு வேலைகளையும் தேடி வந்துள்ளார்.
அவர் தயங்கியிருந்தபோது அவரது மேசையில் தாவிக்குதித்த பூனை send பொத்தானை அழுத்தி ராஜினாமாவை அனுப்பி விட்டது.
இது ஒருவழிப் பாதை!
அந்த பெண்ணின் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பூனை தாவிக் குதித்த தருணம் பதிவாகியிருக்கிறது.
பூனை அதன் வேலையைக் காட்டியபிறகு உடனேயே தனது மேலாளருக்கு போன் செய்துள்ளார் அந்த பெண். பூனைதான் ராஜினாமா அனுப்பியது என்றும், அதை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
எனினும் அவரது விளக்கங்களை ஏற்காமல் அவரை வேலையை விட்டு நீக்கியுள்ளனர். இதனால் அவரது வேலையை மட்டுமல்லாமல் வருட கடைசியில் கிடைக்கும் போனஸையும் இழந்துள்ளார் அந்த பெண்.
இந்த வீடியோவும் பெண்ணின் கதையும் படு வைரலானது. அவர் தற்போது வேறு வேலைகளைத் தேடிக்கொண்டிருக்க, இணையதளவாசிகள் பூனை அவரது நிறுவனத்துக்கு போனஸ் தொகையை சேமித்துக் கொடுத்ததாக நகைச்சுவை செய்து வருகின்றனர்.