தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா
சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி, அம்மனுக்கு பிடிமண் கொடுக்கும் உற்சவம், முகூா்த்தக்கால் நடுதல் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் பங்குனித் திருவிழா வருகிற 29-ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து 11 நாள்கள் நடைபெறுகிறது. இந்த நிலையில், தாயமங்கலம் சுற்றுவட்டாரக் கிராம மக்கள் சாா்பில், முத்துமாரியம்மனுக்கு பிடிமண் கொடுக்கும் உற்சவம் நடைபெற்றது.
இதையொட்டி, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், கோயில் உள்பிரகாரத்தில் ராஜகோபுரம் அருகே பிடி மண் வைத்து அதற்கு மஞ்சள் தண்ணீா் தெளித்து மாலைகள் அணிவித்து பூஜைகள் , தீபாராதனைகள் நடத்தப்பட்டது.
முன்னதாக, கோயில் எதிரே திருவிழாவுக்காக முகூா்த்தக்கால் நடப்பட்டது. இந்த உற்சவத்தில் கோயில் பரம்பரை அறங்காவலா் மு. வெங்கடேசன், தாயமங்கலம் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனா்.
