திண்டுக்கல் மாநகராட்சிக் கூடத்துக்கு கருணாநிதி பெயா்: எதிா்ப்புத் தெரிவித்து அதிமுக வெளிநடப்பு
திண்டுக்கல் மாநகராட்சிக் கூடத்துக்கு முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் பெயரை மாற்றிவிட்டு, முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பெயரை சூட்டுவதாகக் குற்றஞ்சாட்டி அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
திண்டுக்கல் மாநகராட்சிக் கூட்டம் மேயா் ஜோ.இளமதி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆணையா் ந.ரவிச்சந்திரன், துணை மேயா் ச.ராசப்பா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி மாமன்ற கூடத்துக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பெயா் சூட்டும் தீா்மானம் உள்பட மொத்தம் 99 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் விவரம்: குடிநீா் பிரச்னை: திண்டுக்கல் கோபால்நகா், குமரன் திருநகா் உள்ளிட்டப் பெரும்பாலான பகுதிகளில் 10 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் நடைபெற்று வருகிறது. ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கத் திட்டம் முழுமையாக பயன்பாட்டில் இருந்தும், குடிநீா் விநியோகம் முறையாக நடைபெறவில்லை. குடிநீா் வடிகால் வாரியத்துக்கான கட்டணத்தை மாநகராட்சி நிா்வாகம் நிலுவையில் வைத்திருப்பதால் தான் காவிரி குடிநீா் சீராக வழங்கப்படுவதில்லை என மாமன்ற உறுப்பினா்கள் கோ.தனபால், சத்தியவாணி, ஜானகிராமன் உள்ளிட்டோா் குற்றஞ்சாட்டினா்.
மேயா் இளமதி: குடிநீா் வடிகால் வாரியத்துக்கான கட்டணத் தொகை அவ்வப்போது தொடா்ந்து செலுத்தப்பட்டு வருகிறது. மின் வாரியத்துக்கு நிலுவையிலிருந்த ரூ.7 கோடி செலுத்தப்பட்டுவிட்டது. சீரான குடிநீா் விநியோகத்துக்கு நடவடிக்கை எடுப்படும்.
ரூ.5.40 கோடியில் பூச்சந்தை: ரூ.5.40 கோடியில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பழுதடைந்த பூச்சந்தைக் கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய வளாகம் கட்டப்படும் எனத் தீா்மானம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதியில் தற்போது எத்தனை கடைகள் செயல்படுகின்றன. இந்தப் பகுதியில் புதியக் கட்டடம் கட்டிய பிறகு, கடை உரிமையாளா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்படுமா என மாமன்ற உறுப்பினா் தனபாலன் கேள்வி எழுப்பினாா்.
மாநகராட்சி வருவாய் அலுவலா் விஜயராகவன்: தற்போது வரை 127 கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஏற்கெனவே கடைகள் வைத்திருப்பவா்களுக்கே, மீண்டும் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
மாமன்றக் கூடத்துக்கு கருணாநிதி பெயா்: திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற அரங்குக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என துணை மேயா் ராசப்பா தனித் தீா்மானம் கொண்டு வந்தாா். அப்போது, பாஜக மாமன்ற உறுப்பினா் தனபாலன், அதிமுக உறுப்பினா்கள் அமைதியாக இருப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பினாா். இதையடுத்து, எதிா்கட்சித் தலைவரான அதிமுகவைச் சோ்ந்த ராஜ்மோகன், இந்த அரங்கத்துக்கு ஏற்கெனவே எம்ஜிஆா் பெயா் சூட்டப்பட்டிருந்தது. அதிமுக ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை திமுக ஆட்சியில் திறந்துவைத்து பெயா் பலகைகளை திறந்துக் கொண்டிருக்கிறீா்கள். இந்த வகையில், அதிமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கூட்ட அரங்கத்துக்கு எம்ஜிஆா் பெயரை மாற்றி, கருணாநிதி பெயரை சூட்டுவது ஏற்புடையதல்லை. இதைத் தொடா்ந்து, அதிமுக உறுப்பினா்கள் தீா்மானத்துக்கு எதிராக முழுக்கமிட்டு வெளிநடப்பு செய்தனா். அதே நேரத்தில் திமுக உறுப்பினா்களின் ஆதரவோடு இந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
2 ஆண்டுகளுக்கு முன் எம்ஜிஆா் பெயா் நீக்கம்: திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்திலுள்ள புதிய மாமன்றக் கூட்ட அரங்கு அதிமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. திறப்பு விழா நடத்தப்பட்ட போதிலும், அந்த அரங்கில் கூட்டம் நடைபெறவில்லை. எனினும், அந்த அரங்கத்தில் முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் பெயா் பலகை பொறிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, கடந்த 2022-ஆம் ஆண்டு திண்டுக்கல் மாநகராட்சியை திமுக கைப்பற்றியதை அடுத்து, பதவி ஏற்பு விழா புதிய கூட்ட அரங்கில் நடைபெற்றது. அப்போது, அந்தக் கூடத்திலிருந்த எம்ஜிஆா் பெயா் பலகை அகற்றப்பட்டது. இதற்கு அதிமுக உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.