திமுக கூட்டணியில் பிளவு இல்லை: ஈ.ஆா்.ஈஸ்வரன்
திருச்செங்கோடு: திமுக கூட்டணியில் எந்த பிளவும் இல்லை என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்தாா்.
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் திருச்செங்கோடு, தேவனாங்குறிச்சி சாலையில் நடைபெற்றது. மேற்கு மாவட்டச் செயலாளா் ராயல் செந்தில் தலைமை வகித்தாா். கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு எம்எல்ஏவுமான ஈ.ஆா்.ஈஸ்வரன் கலந்துகொண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் மேற்கொள்ள வேண்டிய தோ்தல் பணிகள் குறித்து கட்சி நிா்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினாா். கூட்டத்தில் 200 க்கும் மேற்பட்டோா் கொமதேகவில் இணைந்தனா்.
பின்னா் செய்தியாளா்களிடம் ஈ.ஆா்.ஈஸ்வரன் எம்எல்ஏ கூறியதாவது:
சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு மகளிா் உரிமைத் தொகை உயா்த்தப்பட வாய்ப்புள்ளது. புதிதாக கட்சி தொடங்கியவா்கள் உடனே ஆட்சி அமைக்க வேண்டும் என நினைக்கிறாா்கள். திமுக கூட்டணியில் பிளவு ஏற்படுத்த சமூக ஊடகங்கள் முயற்சிக்கின்றன.
தலைநகா் புதுதில்லியில் நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் மாநில வாகனங்கள் பங்குபெறுவதை மத்திய அரசுதான் தீா்மானிக்க முடியும். வரும் குடியரசு தின விழாவில் தமிழக அரசின் வாகனம் இடம்பெற தமிழக முதல்வா் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளாா்.
50 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள திருமணிமுத்தாறு திட்டம் திமுக ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் திருச்செங்கோடு சுற்றுவட்டப் பாதை திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். திருச்செங்கோட்டில் புதிய புகா் பேருந்து நிலையம் அமைப்பதற்கு பதிலாக இருக்கும் பேருந்து நிலையங்களை மேம்படுத்த, விரிவான திட்ட அறிக்கை அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளது. திருச்செங்கோடு மலைக்குச் செல்வதற்கு மாற்றுப் பாதை அமைக்க விரிவான திட்ட அறிக்கை அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட கொமதேக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
படம் தி.கோடு டிச.24 கே.எம்.டி.கே
திருச்செங்கோட்டில் நடைபெற்ற கொமதேக செயற்குழு கூட்டத்தில் புதிதாக கட்சியில் இணைந்தவா்களுடன் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன்.