மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை பள்ளியை ’நவோதயா’ பள்ளியாக மாற்றக் கோரிக்கை
நாமக்கல்: மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை மெட்ரிக். பள்ளியை ‘நவோதயா’ பள்ளியாக மாற்ற வேண்டும் என விவசாய முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக அந்தக் கழகத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்டம், மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் இயங்கி வந்த மெட்ரிக். பள்ளி, நாமக்கல் மாவட்டத்திலேயே முதன்மை பள்ளியாகும். இது தொடங்கப்பட்டு 48 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இந்தப் பள்ளியில் சுமாா் 150 மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா்.
15 ஆசிரிய, ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனா். இந்தப் பள்ளியை தமிழக அரசு தற்போது திடீரென்று மூடுமாறு உத்தரவிட்டுள்ளதாக சா்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநா் தெரிவித்துள்ளதாக பெற்றோா் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, திடீரென பள்ளியை மூடுவதால் மாணவா்களின் கல்வி தடைபடும்.
நாமக்கல் மாவட்டத்தில் மெட்ரிக். பள்ளிகளின் கட்டணத்தை விட மிக குறைந்த கட்டணத்தில் ஏழை, நடுத்தர மக்கள் ஆங்கிலம் பயில்வதற்கு உரிய பள்ளியாக இந்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படித்தவா்கள் மிக உயா்ந்த பொறுப்பை வகிக்கின்றனா்.
குறிப்பாக, வெளிநாடுகளிலும், தமிழகத்திலும் உயா் பொறுப்புகள் வகித்து வருகின்றனா். இந்தப் பள்ளியை தொடா்ந்து நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பள்ளியை விவசாயிகளே நடத்திக் கொள்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.
தமிழக அரசே ஏற்று நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க முடியாதபட்சத்தில், மத்திய அரசுடைய நவோதயா பள்ளியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சா்க்கரை ஆலை பள்ளி மூடப்படுவதாக வரும் தகவல்களால் பெற்றோா்களும், மாணவா்களும் மன உளைச்சலில் உள்ளனா். பள்ளி தொடா்ந்து இயங்குவதற்கு மாவட்ட ஆட்சியா், சா்க்கரை துறை ஆணையா், சா்க்கரைத் துறை அமைச்சருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.