திமுக - தவெக போட்டியை ஏற்க முடியாது: நயினார் நாகேந்திரன்
திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி என்பதை ஏற்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மறுத்துள்ளார்.
வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி என்று தவெக தலைவர் விஜய் பேசியது குறித்து நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து, செய்தியாளர்களுடன் நயினார் நாகேந்திரன் பேசுகையில்,
``விஜய், இப்போதுதான் கட்சி தொடங்கியுள்ளார். கூட்டம் வருவதைப் பார்த்து, திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி என்றெல்லாம் சொல்லக் கூடாது.
தேர்தல் வரவேண்டும்; ஒழுங்கான வேட்பாளர்கள், பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும்; மக்கள் வாக்களிக்க வேண்டும். அதன்பின்னர்தான், சொல்ல முடியுமே தவிர, ஜோசியம் சொல்ல முடியாது.
மக்களின் சைகைகளிலேயே தெரிந்து விடும் - எது வாக்காக மாறும் என்று. பெரிய தலைவர்கள் ஆரம்பித்த கட்சிகளெல்லாம், இப்போது எப்படி இருக்கிறது? என்பது உங்களுக்கே தெரியும்.
மத்திய அரசிடம் எவ்வளவு நிதி வாங்க வேண்டும்? மக்களுக்காக எவ்வளவு செலவுசெய்ய வேண்டும்? எத்தனை துறைகள் இருக்கிறது? என்பதெல்லாம் ஆட்சியில் இருந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். ஆகையால், திடீரென வந்து தவெகவுக்கும் திமுகவுக்கும்தான் போட்டி என்று கூறுவது எப்படி ஏற்க முடியும்?
நாங்கள் மிகப்பெரிய கட்சி. எங்களுடன் யாரையும் ஒப்பிட்டு பேசக் கூடாது. நாட்டு மக்கள் அக்கறை இருந்தால், ஆட்சி மாற்றத்துக்கு என்ன வழி? என்பதைத்தான் பார்க்க வேண்டும். திமுகவுக்கு எதிர்ப்பு என்பதை மட்டுமே சொல்லக் கூடாது’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க:விஜய் பரீட்சை எழுதட்டும்; திமுகவுக்கு மாற்று அதிமுகதான்: ஆர்.பி.உதயகுமார்