TVK: "ஆள் வைத்து நம்மைப் பற்றி பொய்யான கதையாடல்களைச் செய்வோர் அஞ்சுகின்றனர்" - விஜய் தாக்கு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இரண்டாவது வாரமாக நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் நேற்று அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
நகையில் முதல்வர் ஸ்டாலினைத் தாக்கிப் பேசிய விஜய், "வெளிநாடு சென்று டூர் போயிட்டு வரும்போது எல்லாம் அத்தனை கோடி முதலீடு இத்தனை கோடி முதலீடு என்ன சிரித்துக் கொண்டே சொல்கிறார் முதல்வர். சிஎம் சார் மனசாட்சி தொட்டுச் சொல்லுங்கள் வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டுல முதலீடா?" என்று கேள்வியெழுப்பியிருந்தார்.

அதேபோல் கலைஞர் கருணாநிதியின் ஊரான திருவாரூரில் திமுக-வைத் தாக்கிப் பேசிய விஜய், "குடும்ப ஆதிக்கமில்லாத தமிழகம், ஊழலில்லாத தமிழகம்தான் தவெக-வின் லட்சியம்" என்று சூளுரைத்தார்.
இந்த நிலையில் நேற்றைய சுற்றுப்பயணம் குறித்து விஜய் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில் விஜய், "இரண்டாவது வாரமாக, மீனவச் சொந்தங்கள் மற்றும் மும்மதங்களையும் போற்றி, மத நல்லிணக்கத்தைப் பேணிக் காக்கும் நம் நாகப்பட்டினம் மாவட்ட மக்களையும், உலகுக்கே உணவூட்டும் உழவர் பெருமக்களாகிய திருவாரூர் மாவட்ட மக்களையும் நேற்று சந்தித்தோம்.
நம்மைப் பற்றி, ஆள் வைத்துப் பொய்யான கதையாடல்களைச் செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர்.

இந்த நடுக்கத்தினாலேயே நாம் நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்கும் பொழுதெல்லாம் யாருக்கும் விதிக்காத கடுமையான விதிமுறைகளை நமக்கு விதிக்கின்றனர்.
ஆனால், நாம் நம் கொள்கைத் தலைவர்களின் வழியில் முதன்மைச் சக்தியாக, உண்மையான மக்களாட்சியை அமைத்திட நம் பணிகளை இன்னும் தீவிரப்படுத்துவோம்.
தமிழ்நாட்டு மக்களுக்கான முதன்மைச் சக்தியான நாம், அவர்களுக்காக எதிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். 1967 மற்றும் 1977 தேர்தல்களின் வெற்றி விளைவை 2026 தேர்தலிலும் நிகழ்த்திக் காட்டுவோம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.