விஜய்க்கு வந்ததை விட ரஜினி, அஜித்தை பார்க்க கூட்டம் வரும்: கே.டி.ராஜேந்திர பாலாஜ...
Trump: "7 போர்களை நிறுத்திய எனக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்" - அடம்பிடிக்கும் டொனால்டு ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நீண்ட நாட்களாக தனக்கு நோபல் கொடுக்கவேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கிறார்.
அதுவும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டபோது அதனைத் தான் தடுத்து நிறுத்தினேன் என்று ட்ரம்ப் கூறிக்கொண்டிருக்கிறார்.
இரு நாடுகளிடையேயான போரைத் தான் தடுத்து நிறுத்தியதாக டொனால்டு ட்ரம்ப் கூறுகிறார். ஆனால் இதில் மூன்றாவது நாட்டின் தலையீடு இல்லை என்று இந்தியா கூறிக்கொண்டிருக்கிறது.
தற்போது மீண்டும் டொனால்டு ட்ரம்ப் தனக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
அவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், "உலக அரங்கில், இதற்கு முன்பு நாம் ஒருபோதும் மதிக்கப்படாத அளவுக்கு நாம் மதிக்கப்படும் விஷயங்களைச் செய்து கொண்டிருக்கிறோம்.

நாம் சமாதான ஒப்பந்தங்களை உருவாக்கி வருகிறோம், போர்களை நிறுத்துகிறோம். எனவே இந்தியா-பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் கம்போடியாவிற்கும் இடையிலான போர்களை நாங்கள் நிறுத்தினோம்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானைப் பற்றி யோசித்துப் பாருங்கள். வர்த்தகத்தைப் பயன்படுத்தி நான் அதை எப்படி நிறுத்தினேன் என்பது உங்களுக்குத் தெரியும்.
அவர்கள் வர்த்தகம் செய்ய விரும்புகிறார்கள். மேலும் இரு தலைவர்களிடமும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் நாங்கள் நிறுத்திய இந்தப் போர்கள் அனைத்தையும் நீங்கள் பார்க்கும்போது அது உங்களுக்குத் தெரியும்.
இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, கம்போடியா, ஆர்மீனியா, அஜர்பைஜான், கொசோவோ மற்றும் செர்பியா, இஸ்ரேல் மற்றும் ஈரான், எகிப்து மற்றும் எத்தியோப்பியா, ருவாண்டா மற்றும் காங்கோ போர் என அனைத்தையும் நிறுத்தினோம். அவற்றில் 60 சதவீதம் வர்த்தகம் காரணமாக நிறுத்தப்பட்டன.
இந்தியாவை எடுத்துக்கொண்டால் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் அவர்களுடன் வர்த்தகம் செய்ய மாட்டேன் என்று சொன்னேன்.
உடனே அவர்கள் போரை நிறுத்திவிட்டார்கள். ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதலை நிறுத்தினால் எனக்கு நோபல் பரிசு கொடுப்பதாகச் சொன்னார்கள்.
உடனே 7 போர்களை நிறுத்தி இருப்பதாகச் சொன்னேன். அதோடு ஒவ்வொரு போரை நிறுத்தியதற்கும் நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று சொன்னேன். அதற்கு ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்தினால்தான் நோபல் பரிசு என்றார்கள்.
நான் 7 போரை நிறுத்தி இருப்பதாகச் சொன்னதற்கு அது சாதாரண போர் என்றும், இது மிகப்பெரிய போர் என்றும் சொன்னார்கள்.

ரஷ்ய அதிபர் புடினுடன் எனக்கு நல்ல உறவு இருந்ததால் ரஷ்யா-உக்ரைன் மோதலைத் தீர்ப்பது எளிதாக இருக்கும் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவரால் ஏமாற்றமடைந்தேன். ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
எளிதானதாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் நாம் அதை எப்படியாவது செய்து முடிப்போம்" என்றும் அவர் கூறினார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர இரு நாட்டுத் தலைவர்களையும் அழைத்து டொனால்டு ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.