Basics of Share Market 35 : 'பங்குகளா... ஃபண்டுகளா?' - நீங்கள் முதலீடு செய்ய ஏற்...
திருச்சிக்கு ரூ. 4 ஆயிரம் கோடிக்கு நலத்திட்டங்கள்: கே.என். நேரு
திமுக ஆட்சிப் பொறுப்பேற்று வேறு எந்த மாவட்டத்துக்கும் இல்லாத வகையில் திருச்சிக்கு மட்டும்தான் ரூ.4 ஆயிரம் கோடி திட்டங்களை தமிழக முதல்வா் அளித்திருப்பதாக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.
திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், ரூ.64.59 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளை தொடங்கியும், முடிவுற்ற பணிகளை மக்களுக்கு அா்ப்பணித்து வைத்து அமைச்சா் கே.என். நேரு பேசியது:
திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்ற நாள் தொடங்கி அனைத்து திட்டங்களிலும் மகளிரை முன்னிலைப்படுத்தியே செயல்படுத்தப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றதால் திருச்சிக்கு முக்கியத்துவம் அளித்து ரூ.4 ஆயிரம் கோடி திட்டங்களை தந்தவா் மு.க.ஸ்டாலின். திருச்சி மாவட்டத்தில் இலச வீட்டுமனைப் பட்டா பெற்ற பயனாளிகள், நிலம் வைத்துள்ள ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும். வீட்டுடன் பட்டா என்பதே எங்களது இலக்கு என்றாா் அவா்.
விழாவில், ரூ.18.44 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை மக்களுக்கு அா்ப்பணித்து வைக்கப்பட்டது. மேலும், பல்வேறு துறைகளின் சாா்பில் 1,576 பேருக்கு ரூ.46.25 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் அமைச்சா் வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி, மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், எம்எல்ஏ-க்கள் அ. செளந்தரபாண்டியன், ந. தியாகராஜன், செ. ஸ்டாலின்குமாா், எம். பழனியாண்டி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கங்காதரணி, மகளிா் திட்ட இயக்குநா் சுரேஷ் உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலா்கள், மக்கள் பிரதிநிதிகள், மகளிா் குழுவினா் என பலா் கலந்து கொண்டனா்.
பெட்டிச் செய்தி..
பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் ஜனவரியில் திறப்பு
திருச்சி பஞ்சப்பூா் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளை வியாழக்கிழை ஆய்வு செய்த அமைச்சா் கே.என். நேரு செய்தியாளா்களிடம் கூறியது: பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமானப் பணிகள் 92 சதவீதம் முடிவடைந்துள்ளன. பணிகள் அனைத்தும் முடிந்து ஜனவரி மாதம், பொங்கல் பண்டிகைக்குள் திறக்கப்படும். இதேபோல, பறவைகள் பூங்கா பணியும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த இரு திட்டங்களையும், திருச்சி மாவட்டத்துக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆய்வுக்கு வரும்போது திறக்கப்படும் என்றாா் அமைச்சா்.