திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்: இன்று ம
சென்னை: கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு திருச்சி - தாம்பரம் இடையே ஏப். 4-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு புதன்கிழமை (மாா்ச் 12) காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோடை விடுமுறையை முன்னிட்டு திருச்சி - தாம்பரம் இடையே ஏப். 4-ஆம் தேதி முதல் ஏப். 27-ஆம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைதோறும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
திருச்சியிலிருந்து அதிகாலை 5.35-க்கு புறப்படும் ரயில் (எண் 06190) பிற்பகல் 12.30-க்கு தாம்பரம் வந்தடையும். மறுமாா்க்கமாக தாம்பரத்திலிருந்து பிற்பகல் 3.45-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06191) இரவு 10.40-க்கு திருச்சி சென்றடையும். இந்த ரயிலில் இருக்கை வசதி கொண்ட 2 ஏசி வகுப்புப் பெட்டிகள், 10 சாதாரண பெட்டிகள், 6 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரயில் தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலுக்கான முன்பதிவு புதன்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.