இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள்: சென்னையில் எங்கிருந்து இயக்கப்படும்?
திருப்பதி கூட்ட நெரிசல்.. என்ன நேர்ந்தது?
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் பெற ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தபோது, திடீரென முக்கிய நுழைவாயில் திறக்கப்பட்டதால், பக்தர்கள் கண்மூடித்தனமாக அதைநோக்கி ஓடியபோது கீழே விழுந்தவர்களை மிதித்துக்கொண்டு மக்கள் ஓடியதில் 6 பேர் பலியாகினர். 30 பேர் காயமடைந்தனர்.
எஸ்விஎஐஎம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பக்தர்களில் சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகவும் மற்றவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் இவர்கள் அனைவரும் இன்று மாலை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று இரவு 8 மணிக்கு விஷ்ணு நிவாசம் அருகே இந்த சம்பவம் நேரிட்டுள்ளது. வரிசையில் இருந்த பக்தர் ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை வெளியேற்றுவதற்காக நுழைவு வாயில் திறக்கப்பட்டது. இதுபற்றி தெரியாமல், வரிசையில் இருந்த பக்தர்கள் நுழைவு வாயிலுக்குள் ஒரே நேரத்தில் ஏராளமானோர் நுழைய முயன்றதால்தான் இந்த சம்பவம் நேரிட்டதாகக் கூறப்படுகிறது.
பல மணி நேரங்களாக பக்தர்கள் இங்கு காத்திருந்திருக்கிறார்கள். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்துள்ளது. அப்போதுதான் கதவு திறக்கப்பட்டதும் மக்கள் ஓடியதால் இந்த நெரிசல் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்டுகள் பெற வரிசையில் காத்திருந்த பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் போன நிலையில், டிக்கெட் கவுன்ட்டரை நோக்கி மக்கள் முண்டியடித்ததால் நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கிறது.
திருப்பதியில், பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்ததாக கோயில் நிர்வாகம் கூறியிருந்தாலும், கட்டுக்கடாங்காதக் கூட்டத்தை சமாளிக்கத் தேவையான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றே பக்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
திருமலையில் வைகுண்ட ஏகாதசியின்போது ஏழுமலையானை தரிசிக்கவும், வைகுண்ட வாயில் வழியாகச் செல்லவும் தேவஸ்தானம் தரிசன டிக்கெட்டுகளை வியாழக்கிழமை காலை 5 மணிக்கு வழங்க முடிவு செய்து திருமலை திருப்பதி உள்பட 9 இடங்களில் 94 கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன.
வைகுண்ட ஏகாதசி நாள்களில் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை 2 - 3 லட்சம் வரை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வைகுண்ட வாயில் வழியாகச் செல்வதற்காக, வியாழக்கிழமை காலையில் டிக்கெட் பெற புதன்கிழமையே மக்கள் வரிசையில் நின்றுள்ளனர்.
டிக்கெட் கவுன்ட்டர்களில் பக்தர்கள் புதன்கிழமை காலை முதல் காத்திருக்கத் தொடங்கியதால் அனைத்துப் பகுதியில் உள்ள கவுன்ட்டர்களும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. இந்நிலையில்தான், புதன்கிழமை இரவு 8 மணி அளவில் இந்த சம்பவம் நேரிட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதி ருயா மற்றும் எஸ்விஐஎம்எஸ் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு 6 பேர் பலியாகினர். இவர்களில் தமிழகத்தின் சேலத்தைச் சேர்ந்த மல்லிகா உள்பட 5 பெண்கள் அடங்குவர். பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.