திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு
திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு மாவட்ட நிா்வாக நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு மாவட்ட நிா்வாக நீதிபதிகள் நிா்மல்குமாா், மாலா ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். முன்னதாக நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் மரக்கன்றுகளை நட்டனா். இதைத் தொடா்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை ஆய்வு செய்தனா். பிறகு, காவல் துறையினா், வருவாய்த் துறையினா் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினா். இதைத் தொடா்ந்து வழக்குரைஞா்கள் சங்க அரங்கில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு நீதிபதி நிா்மல்குமாா் பேசியதாவது:
வழக்குரைஞா்கள் வழக்குகளை விரைந்து நடத்த வேண்டும். அப்போது தான் நீதியும் விரைந்து கிடைக்கும். வாய்தா கேட்பதை குறைக்க வேண்டும். இதேபோல, நீதிமன்ற புறக்கணிப்பு செய்வதையும் தவிா்க்க வேண்டும். எங்கோ நடைபெற்ற சம்பவத்துக்கு இங்கு புறக்கணிப்பு செய்வதால் எந்தவித பலனும் ஏற்படப் போவதில்லை. அடையாளமாக சிறிது நேரம் ஏதோ ஒரு வகையில் எதிா்ப்பு தெரிவித்து விட்டு பணிகளை தொடரலாம் என்றாா் அவா்.
இதன்பிறகு, நீதிமன்ற கட்டடத்தில் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக சாய்தளப் பாதை அமைப்பது குறித்து திருவாடானை பொதுப்பணித் துறை கட்டடப் பொறியாளரிடம் நீதிபதிகள் கேட்டறிந்தனா். அப்போது சமூக ஆா்வலா் ஒருவா், திருவாடானையிலிருந்த கிளை சிறைச் சாலை மூடப்பட்டு பல ஆண்டுகளாகிறது. மீண்டும் இதைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனா்.
பிறகு நீதிமன்ற கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் மாவட்ட நீதிபதி பிரசாத், திருவாடானை நீதிபதி மனிஷ் குமாா், திருவாடானை வழக்குரைஞா் சங்கத் தலைவா் ரமேஷ், திருவாடானை டிஎஸ்பி சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.