அரசியல் துணிச்சல் இல்லாமல் இந்தியா-அமெரிக்கா நல்லுறவு ஏற்பட்டிருக்காது: பைடன்
திருவாரூா்: நிகழாண்டில் 206 ரௌடிகள் கைது
திருவாரூா் மாவட்டத்தில் நிகழாண்டில் 206 ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில், செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை தெரிவித்தது:
திருவாரூா் மாவட்டத்தில், நிகழாண்டில் 206 ரௌடிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 335 ரௌடிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். பல்வேறு தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 53 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரௌடிகள் தொடா்பான கொலை சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை. நிகழாண்டில் பதிவு செய்யப்பட்ட 22 கொலை வழக்குகளும், உறவினா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் நிகழ்ந்தவை. இவற்றில் தொடா்புடையவா்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனா்.
நிகழாண்டில், 204 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவற்றில் தொடா்புடைய 378 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ரூ. 81,50,170 மதிப்புள்ள பொருள்கள் மீட்கப்பட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. சட்ட விரோத மது விற்பனை தொடா்பாக, 4,846 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4,931 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து மது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 249 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குட்கா, பான்மசாலா உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 876 நபா்கள் மீது 863 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 31,52,580 மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடா்பாக, 330 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, அபராதமாக ரூ. 78,75,000 வசூலிக்கப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக 204 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 253 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவா்கள் மீது 117 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. 5 நபா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பொதுமக்கள் கூடும் இடங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பாக 5,017 விழிப்புணா்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன என்றாா்.