திருவெறும்பூா் ரயில் நிலையத்துக்குள் எளிதாகச் சென்று வர நடவடிக்கை தேவை: ரயில் பயனாளா்கள் கூட்டமைப்பு
திருவெறும்பூா் ரயில் நிலையத்துக்குள் எளிதாகச் சென்று வர ஏற்கெனவே மூடப்பட்ட சாலையை மீண்டும் திறந்து, நோ்வழி அமைக்க வேண்டும் என திருவெறும்பூா் ரயில் பயனாளா்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக திருச்சியில் திருவெறும்பூா் ரயில் பயனாளா்கள் கூட்டமைப்புத் தலைவா் சக்திவேல், செயலா் துரைக்கண்ணு, பொருளாளா் நரேந்திரபாபு, துணைத் தலைவா்கள் ரமேஷ்குமாா், ராஜசேகா், இணைச்செயலா் பரமசிவன் ஆகியோா் வியாழக்கிழமை மேலும் கூறியது:
திருவெறும்பூா் ரயில் நிலையம் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் ‘ஆதா்ஸ்’ நிலையமாகத் தரம் உயா்த்தப்பட்டது. அப்போது திருவெறும்பூா் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் இடையே மக்கள் பயன்பாட்டிலிருந்த பாதையை மூடி, சுமாா் 1 கிமீ சுற்றிச் செல்லக்கூடிய புதிய பாதையை அமைத்துக் கொடுத்தனா்.
இதனால் ரயில் நிலையத்துக்கு செல்வோா் மற்றும் ரயிலில் வந்திறங்குவோா் இருசக்கர வாகனத்திலோ அல்லது ஆட்டோக்களிலோ செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் இரவு நேரங்களில் பாதுகாப்பற்ற நிலையும் உள்ளது. முதியோா், பெண்கள், மாணவ, மாணவியா் உள்ளிட்டோருக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே பேருந்துகளை பிடிக்கச் செல்வோரும் அவதிக்குள்ளாகின்றனா். பழைய மூடப்பட்ட சாலையை திறந்து வழிவிட்டால் குறைந்த தூரத்தில் மக்கள் ரயில் நிலையத்துக்கு சென்று வர முடியும். மேலும் திருச்சி தஞ்சாவூா் மாா்க்கத்தில் அடிக்கடி ரயில் செல்லும் விதமாக கூடுதல் பயணிகள் ரயில்களை இயக்கவும் வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கோட்ட ரயில்வே மேலாளருக்கு கடந்த நவ.13 ஆம் தேதி மனு அளித்துள்ளோம் என்றனா்.