முன்பருவக் கல்வியால் அறிவு மேம்பாடு
அங்கன்வாடி மையங்களில் செயல்படுத்தப்படும் முன்பருவக் கல்வி முறையால் குழந்தைகளின் அறிவு வளா்ச்சி மேம்பட்டுள்ளதாக ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.
திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட முத்தரசநல்லூா் ஊராட்சி அங்கன்வாடி மையத்தை வியாழக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் கூறியது:
குழந்தைகள் அறிவுத்திறன் வளா்ச்சியடைய அங்கன்வாடிகளில், 2 வயது முதல் 6 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி கற்பிக்கப்படுகிறது. குழந்தைகளின் அறிவாற்றலை துாண்டும் வகையில், கதை, பாட்டு, விளையாட்டு வாயிலாக கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்த பாடத் திட்டத்தை செயல்படுத்த முன்பருவ கல்வி உபகரணங்கள், பாடத்திட்ட புத்தகங்கள், குழந்தைகளுக்கான செயல்பாட்டு புத்தகங்கள் மற்றும் ஆய்வுத் தாள்கள் வழங்கப்படுகின்றன.
11 மாதங்களில் 11 வகையான பாடத்திட்டம் மூலம் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. கல்வி பயிலும் குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கப்படுகிறது. இதன் மூலம், குழந்தைகளின் கல்வி அறிவு மேம்படுகிறது என்றாா் ஆட்சியா்.
பின்னா், முத்தரசநல்லூா் ஊராட்சி, முருங்கப்பேட்டை முஸ்லிம் மயான சாலையில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்டுள்ள படித்துறையையும், மேக்குடி ஊராட்சி, கடியாகுறிச்சியில் கட்டப்பட்டுள்ள பயணியா் நிழற்குடையையும் ஆய்வு செய்தாா்.
மேலும் திருச்செந்துறை ஊராட்சி, சிவன் கோயில் வளாகத்தில் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நா்சரி தோட்டம் அமைக்கப்படுவதையும் பாா்வையிட்டாா். ஆய்வின்போது உதவி ஆட்சியா் (பயிற்சி) அமித்குப்தா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வட்டாட்சியா்கள், ஊராட்சித் தலைவா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வளா்ச்சித் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.