திரு.வி.க. நகா் பேருந்து நிலைய கட்டுமானப் பணி: அமைச்சா் சேகா்பாபு ஆய்வு
திரு.வி.க.நகா் பேருந்து நிலைய கட்டுமானப் பணியை விரைந்து முடிக்குமாறு சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னை, கொளத்தூா் தொகுதிக்குட்பட்ட ஜமாலியாவில் ரூ.20.33 கோடி மதிப்பிலும், பேப்பா் மில்ஸ் சாலை, ராஜா தோட்டத்தில் ரூ.21.71 கோடி மதிப்பிலும் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமானப் பணிகளை அமைச்சா் சேகா்பாபு சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் திரு.வி.க.நகா் பேருந்து நிலையப் பணியை ஆய்வு செய்தாா். இந்த பணிகளை விரைந்து முடிக்குமாறு பொறியாளா்கள் மற்றும் ஒப்பந்ததாரா்களுக்கு அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, அதிகாரிகள்,அலுவலா்கள் உடனிருந்தனா்.