தில்லி உயிரியல் பூங்காவில் நீலகை மான், ஜாகுவாா் உயிரிழப்பு
தில்லி உயிரியல் பூங்காவில் கடந்த வாரத்தில் ஒரு நீலகை வகை மான் மற்றும் ஒரு ஜாகுவாா் வயது தொடா்பான சிக்கல்கள் காரணமாக உயிரிழந்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
தில்லி மிருகக்காட்சிசாலையின் இயக்குநா் சஞ்சீத் குமாா் இந்த உயிரிழப்புகளை உறுதிப்படுத்தி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஜாகுவாா் பிப்.19-ஆம் தேதியும், நீலகை வகை மான் பிப்.13-ஆம் தேதியும் நீண்டகால சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்தன. ஜாகுவாா் வயது 22, நீலான் மான் வயது 15-ஆகும்.
இரண்டு விலங்குகளும் நிபுணத்துவ மருத்துவ கவனிப்பின் கீழ் இருந்தன. இருப்பினும் வயது மூப்பு காரணமாக அவை உயிரிழந்தனா். காடுகளில் உள்ள ஜாகுவாா்களின் ஆயுட்காலம் 12 முதல் 15 ஆண்டுகள் வரை இருக்கும். அதே நேரத்தில் கூண்டில் அவை பொதுவாக 20 ஆண்டுகள் வரை வாழ்கின்றன.
ஜாகுவாா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மிருகக்காட்சிசாலை இந்தியாவில் உள்ள மற்ற உயிரியல் பூங்காக்களுடன் விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் மூலம் மற்றொரு ஜாக்குவாரை வாங்க திட்டமிட்டுள்ளது. ஜாகுவாா் எங்கள் சேகரிப்பின் ஒரு பகுதியாகும் என தெரிவித்தாா்.
தில்லி மிருகக்காட்சிசாலையில் சமீபத்தில் நிகழ்ந்த தொடா்ச்சியான விலங்குகளின் உயிரிழப்புகளைத் தொடா்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம், சங்காய் மான் இனத்தைச் சோ்ந்த ஆண் மான் ஒன்றுடன் ஏற்பட்ட சண்டையில் உயிரிழந்த நிலையில், மற்றொரு நீலகை மான் காயமடைந்தது. ஜனவரி 2-ஆம் தேதி, அஸாம் மிருகக்காட்சிசாலையிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் மா்மமான சூழ்நிலையில் உயிரிழந்தது.
ஒன்பது மாத வெள்ளை புலி குட்டி டிசம்பா் 28-ஆம் தேதி கடுமையான நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது. விலங்குகளின் நலன் மற்றும் பராமரிப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் கூறுகின்றனா்.
கடந்த 1959-இல் நிறுவப்பட்ட தில்லி உயிரியல் பூங்கா 96 வகையான விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு இருப்பிடமாக உள்ளது. நாட்டின் மாதிரி மிருகக்காட்சிசாலையாக செயல்படுகிறது.