தில்லி, சத்தீஸ்கரை தொடர்ந்து தமிழகத்திலும்....: அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!
தமிழகத்திலும் மதுபான ஊழல் நடைபெற்றுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
டாஸ்மாக் மதுபான கொள்முதல், விற்பனை, மதுக்கூடம் ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் முறைகேடு நடைபெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினா் கடந்த வாரத்தில் சோதனை நடத்தினர்.
சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம், திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான நிறுவனம் உள்பட 7 இடங்கள், தமிழகம் முழுவதும் மொத்தம் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத ரொக்கம் மற்றும் ஏராளமான எண்ம (டிஜிட்டல்) ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க: செங்கல்பட்டில் முதல்வர் ஸ்டாலின்! ரூ.1,285 கோடியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல்!
இந்த நிலையில், தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு, சத்தீஸ்கர் மதுபான ஊழல் போன்று தமிழகத்திலும் மதுபான ஊழல் நடைபெற்றுள்ளதாக அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
தில்லியில் கடந்த ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில் மதுபானக் கொள்கையில் முறைகேடு செய்ததாக அப்போதைய முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரை அமலாக்கத்துறையினர் கைது செய்திருந்தனர்.
இதனிடையே, சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மதுபான ஊழல் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில், முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல், அவரது மகன் சைதன்யா பாகல் ஆகியோரின் வீடுகளில் திங்கள்கிழமை அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.