Doctor Vikatan: பழுத்து, சீழ் கோத்த பருக்கள்... சோப்பும் க்ரீமும் பலன் தருமா?
தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் ஆப்பிரிக்க பபூன் மரணம்
தில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் ஒரு பெண் ஆப்பிரிக்க பபூன் இறந்துள்ளது. பல வாரங்களில் இந்த வசதியில் மூன்றாவது விலங்கு மரணம் அடைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தில்லி மிருகக்காட்சிசாலை என்று பொதுவாக அழைக்கப்படும் தேசிய உயிரியல் பூங்கா, வியாழக்கிழமை அதிகாலையில் சோம்பலாகத் தோன்றிய ‘சிந்து’ என்ற பெயரிடப்பட்ட பபூன் (பெரிய வடிவ குரங்கு இனம்), நடுங்கத் தொடங்கிய பின்னா் கால்நடை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
ஒரு அதிகாரி கூறுகையில், விலங்கு பிற்பகலில் இறந்தது. ‘இறப்புக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. பரேலியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்’ என்று தேசிய உயிரியல் பூங்கா இயக்குநா் சஞ்சீத் குமாா் கூறினாா்.
சமீபத்தில், உயிரியல் பூங்காவில் ஒரு வெள்ளைப் புலி குட்டியும் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகமும் இறந்தன.
ஒரு மூத்த அதிகாரி கூறுகையில், ‘குளிா் காலநிலை இறப்புகளுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்’ என்று கூறினாா். ‘பபூனின் செயல்பாட்டு நிலை குறைந்து, நடுக்கம் அது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதைக் குறிக்கிறது’ என்று அதிகாரி கூறினாா்.
தேசிய உயிரியல் பூங்காவில் நான்கு பபூன்கள் இருந்தன. ‘சிந்து’ இறந்த பிறகு, இப்போது மூன்று மட்டுமே எஞ்சியுள்ளன.
ஜன.2-ஆம் தேதி, உயிரியல் பூங்காவில் ‘தா்மேந்திரா’ என்ற ஆண் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் ‘கடுமையான ரத்தக்கசிவு குடல் அழற்சி’ காரணமாக இறந்தது. இது ஒட்டுண்ணிகள், நச்சுகள் அல்லது பாக்டீரியா தொற்றுகளால் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான குடல் நிலையாகும். இனப்பெருக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக ‘தா்மேந்திரா’ செப்டம்பா் 2024-இல் உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டது. உயிரியல் பூங்காவில் இப்போது ஒரே ஒரு பெண் காண்டாமிருகம் மட்டுமே உள்ளது.
நான்கு நாள்களுக்கு முன்பு, ஒன்பது மாத வெள்ளைப் புலி குட்டி இறந்தது. மரணத்திற்கான காரணங்களாக அதிா்ச்சி, கடுமையான நிமோனியா இருப்பது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது.
1959-இல் நிறுவப்பட்ட தில்லி தேசிய உயிரியல் பூங்கா நாட்டிற்கு ஒரு ‘மாதிரி’ மிருகக்காட்சிசாலையாகக் கருதப்படுகிறது. இதில் 96-க்கும் மேற்பட்ட வகையான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன.