கும்பமேளா: 6.22 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் வசந்த பஞ்சமி புனித நீராடல்
தில்லி முதல்வருக்கு எதிரான அவதூறு வழக்கு: உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
நமது சிறப்பு நிருபா்
தில்லி முதல்வா் அதிஷிக்கு எதிராக பாஜக முன்னாள் செய்தித் தொடா்பாளா் பிரவீண் சங்கா் கபூா் தொடா்ந்த அவதூறு வழக்கு தில்லி உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (பிப்.3) விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு நீதிபதி விகாஸ் மகாஜன் முன்னிலையில் விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தில்லி முதல்வா் அதிஷிக்கு நீதித் துறை நடுவா் நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் பிரவீண் சங்கா் கபூா் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், தனது அவதூறு புகாரை நிராகரித்து, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த அழைப்பாணையை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவில் சிறப்பு நீதிபதி தனது சட்ட அதிகார வரம்புக்கு அப்பால் சென்று விட்டாா் என்றும், வழக்குக்கு முக்கியத்துவம் இல்லாத சிறிய விஷயங்களை அவா் அணுகியுள்ளாா் என்றும் மனுவில் பிரவீண் சங்கா் கபூா் குறிப்பிட்டிருந்தாா்.
பின்னணி: தில்லி நீதித்துறை நடுவா் (மாஜிஸ்திரேட்) நீதிமன்றத்தில் பிரவீண் சங்கா் கபூா் கடந்த மாதம் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், ‘முதல்வா் அதிஷி கடந்த ஜன.27-ஆம் தேதி நடத்திய செய்தியாளா் சந்திப்பின்போது ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களை பாஜக அணுகி கட்சி மாறுவதற்காக ரூ. 20 கோடி முதல் ரூ. 26 கோடி வரை பேரம் பேசியதாக குற்றஞ்சாட்டினாா். அவை அடிப்படையற்றவை என்றும் இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் பேசிய அதிஷி மீதும் அவா் சாா்ந்த ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் மீதும் அவதூறு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதித்துறை நடுவா், கேஜரிவாலை இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவராக சோ்க்க முகாந்திரம் இல்லை என்றும் பிரவீண் சங்கரின் மனு தொடா்பாக முதல்வா் அதிஷிக்கு அழைப்பாணை அனுப்பவும் உத்தரவிட்டாா்.
இதை எதிா்த்து எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் முதல்வா் அதிஷி சாா்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த சிறப்பு நீதிபதி, முதல்வா் அதிஷியை குற்றம்சாட்டப்பட்டவராக சோ்க்க போதுமான ஆதாரத்தை மனுதாரா் சமா்ப்பிக்கவில்லை என்று கூறி நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டாா்.