Womens World Cup: மந்தனா, பிரதிகா அதிரடியில் வீழ்ந்த நியூசிலாந்து; அரையிறுதிக்கு...
தீபாவளிக்குப் பிறகான டில்லியின் கடும் புகை மூட்டம்; குறைந்தது எப்படி?
டில்லியின் காற்று மாசுப் பிரச்னை ஆண்டுதோறும் தீபாவளிக்குப் பிறகு தீவிரமடையும். இம்முறை நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மாசு உச்சத்தைக் கடந்தது.
ஆனால், ஆச்சர்யமாக ஒரே நாளிலேயே காற்றின் தரம் மேம்பட்டது. இதற்கு அரசின் நடவடிக்கையல்ல, வானிலைச் சூழ்நிலையே காரணம் என நிபுணர்கள் கூறினர்.

PM2.5 - நுண்ணிய தூசி துகள்கள் நுரையீரல் வழியாக ரத்தத்திற்குள் நுழைந்து ஆஸ்துமா, இதய நோய், நுரையீரல் சேதம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன. தீபாவளி இரவில் டில்லியில் நுண்ணிய தூசி துகள்களான PM2.5-வின் அளவு 675 மைக்ரோகிராம் வரை உயர்ந்தது. இது உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பு வரம்பைவிட 45 மடங்கு அதிகம்.
தீபாவளிக்குப் பிறகு மாசு திடீரென குறைந்ததற்கு அரசின் எந்தக் கொள்கையும் காரணமல்ல. மாறாக, மூன்று முக்கிய வானிலை மாற்றங்களே காற்றை இயற்கையாக சுத்தம் செய்ய உதவின.
முதலில், தீபாவளி இரவில் அமைதியாக இருந்த காற்று சில மணி நேரத்தில் திசைமாற்றம் பெற்று கிழக்கிலிருந்து பலமாக வீசத் தொடங்கியது. இந்த பலமான காற்றே புகை மற்றும் தூசியை டில்லியிலிருந்து வெளியேற்றியது.

இரண்டாவது, அக்டோபர் நடுப்பகுதியில் வந்த தீபாவளி காரணமாக வானிலை இன்னும் சற்று சூடாக இருந்தது. இதனால் காற்று மேலே கலக்கச் சுலபமாகி, மாசடைந்த காற்று தரையில் தங்காமல் மேலே பரவியது.
மூன்றாவது, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் கடந்த ஆண்டைவிட சுமார் 79 சதவிகிதம் குறைவான பயிர்க்கழிவுகள் எரிப்பு நடந்தது. இதனால் வெளிமாநில புகை தில்லியை அதிகமாக பாதிக்கவில்லை.
பாஜக எம்.பி. மனோஜ் திவாரி, “இன்னும் இரண்டு ஆண்டுகளில் தில்லியின் காற்று சுத்தமாகும்” என்றார். ஆனால், தில்லி காற்றை சுவாசிப்பது தினமும் 10 முதல் 30 சிகரெட்டுகளை புகைப்பதற்குச் சமம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தீபாவளிக்குப் பிறகு கிடைத்த சுத்தமான காற்று ஓர் அதிர்ஷ்டம் மட்டுமே. நீடித்த மாசுக் கட்டுப்பாடு நடவடிக்கைகளே டில்லியின் உண்மையான தீர்வாகும்.