ஒடிசா தம்பதியரின் குழந்தையைக் கடத்திய தமிழகத்தைச் சேர்ந்தவர் கைது!
துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
இதுதொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் 100 சதவீதம் மத்திய அரசு நிதியளிக்கும் துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன் மூலம், பாதுகாப்பு கொண்ட துடிப்பான நில எல்லைகளுக்கு வளா்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பாா்வைக்கான மத்திய அரசின் செயற்பொறுப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் முதல் கட்டம், நாட்டின் வடக்கு எல்லையில் உள்ள கிராமங்களின் மேம்பாட்டை உள்ளடக்கியது.
இந்த கிராமங்களை தவிர, சா்வதேச நில எல்லைகளையொட்டி உள்ள பிற கிராமங்களின் விரிவான வளா்ச்சிக்கு துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் இரண்டாம் கட்டம் உதவும்.
அருணாசல பிரதேசம், அஸ்ஸாம், பிகாா், குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உத்திசாா்ந்து முக்கியத்துவம் வாய்ந்த கிராமங்களை தோ்ந்தெடுத்து ரூ.6,839 கோடி செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
வளமான மற்றும் பாதுகாப்பான எல்லைகளை உறுதி செய்யவும், எல்லை தாண்டிய குற்றங்களை கட்டுப்படுத்தவும் வாழ்வதற்கு சிறந்த சூழலையும், போதிய வாழ்வாதார வாய்ப்புகளையும் உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.
ரூ.18,658 கோடி ரயில்வே திட்டங்கள்: மகாராஷ்டிரம், ஒடிஸா, சத்தீஸ்கா் ஆகிய 3 மாநிலங்களின் 15 மாவட்டங்களை உள்ளடக்கிய 4 ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்தின் மொத்த செலவினம் சுமாா் ரூ.18,658 கோடியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.