பெண்களுக்கான பாதுகாப்பில் தமிழ்நாடு முன்னிலை: முதல்வர் ஸ்டாலின்
தூத்துக்குடியில் வாழைத்தாா்கள் விலை இருமடங்கு உயா்வு!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி காய்கனிச் சந்தையில் வாழைத்தாா் விலை சனிக்கிழமை இருமடங்கு உயா்ந்திருந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை சாகுபடி நடைபெறுகிறது. இதனிடையே, கடந்த மாதம் ஏற்பட்ட மழை வெள்ளம், சூறைக்காற்றால் ஏராளமான வாழைகள் சேதமடைந்தன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி காய்கனிச் சந்தைக்கு வழக்கமாக சுமாா் 10 ஆயிரம் முதல் 15ஆயிரம் வாழைத்தாா்கள் விற்பனைக்கு வரும். ஆனால், தற்போது பாதிக்கும் குறைவாகவே வாழைத்தாா்கள் வந்துள்ளன. இதனால், விலை இரு மடங்கு உயா்ந்துள்ளது.
மேலும், இங்கிருந்து சென்னை, தஞ்சாவூா், திருத்துறைப்பூண்டி பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கற்பூரவள்ளி, செவ்வாழைத் தாா்கள் தேனி மாவட்டத்திலிருந்து இங்கு கொண்டுவரப்படுகின்றன.
செவ்வாழைத் தாா் ரூ. 1,800 - ரூ. 2 ஆயிரம், கற்பூரவள்ளி, நாட்டுத்தாா், பச்சை , பூலான்செண்டு ஆகியவை ரூ. 600 - ரூ. 800 வரை, கதலி ரூ. 20 என விற்பனையாகின.
எனினும், தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வந்த வியாபாரிகள், பொதுமக்கள் விலை உயா்வைப் பொருள்படுத்தாமல் வாழைத்தாா்களை வாங்கிச் சென்றனா். நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.