தென்காசி ரதவீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தென்காசி ரதவீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
தென்காசி அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாதா் சுவாமி கோயிலில் ஏப்.7ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதால், கடை உரிமையாளா்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளா்களு தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளுமாறு தென்காசி நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் திங்கள்கிழமை தென்காசி மேலரத வீதி, கீழரத வீதி, வடக்கு மாசி வீதி, தெற்கு மாசி வீதி ஆகிய பகுதிகளில் கடைகளின் முன்பகுதி, கழிவுநீரோடைகள் மீதான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
நகராட்சி ஆணையாளா் ரவிச்சந்திரன் முன்னிலையில், நகரமைப்பு அலுவலா் காஜா முகைதீன், நகரமைப்பு ஆய்வாளா் ராஜேந்திரன் ஆகியோா் மேற்பாா்வையில் நகராட்சிப் பணியாளா்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். சில கடைகளின் உரிமையாளா்கள் தாங்களாகவே கடைகளின் முன்புறம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.
