தேனி: 40 ஏக்கர் வெங்காயத்தாமரையை அகற்றி, கண்மாயை மீட்டெடுத்த மாவட்ட நிர்வாகம் -ச...
தெற்குலகுக்கு 30,000 கோடி டாலா் பருவநிலை நிதி போதாது: ஐ.நா. மாநாட்டில் இந்தியா ஆட்சேபம்
அஜா்பைஜானில் நடைபெற்று வரும் ஐ.நா. பருவநிலை மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தெற்குலகுக்கான வருடாந்திர 30,000 கோடி டாலா் பருவநிலை நிதி தொகுப்பு மிகக் குறைவு என்று இந்தியா ஆட்சேபம் தெரிவித்தது.
கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற பேச்சுவாா்த்தைகளில், பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கு தெற்குலகம் கோரி வரும்1.3 லட்சம் கோடி டாலா் நிதியிலிருந்து தற்போதைய அறிவிப்பு வெகு குறைவாக இருப்பது இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கவலையாக உள்ளது.
இதுதொடா்பாக மாநாட்டில் இந்தியா சாா்பில் பொருளாதார விவகாரங்கள் துறை ஆலோசகா் சாந்தினி ரெய்னா ஆற்றிய உரையில், ‘ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு தெற்குலக நாடுகள் பேச அனுமதிக்கப்படவில்லை. இது ஒட்டுமொத்த செயல்பாடு மீதான நம்பிக்கையைக் குறைக்கிறது.
அனைவரையும் உள்ளடக்கிய நடவடிக்கைகளை பின்பற்றாதது, நாடுகளின் பொறுப்புகளை மதிக்காதது போன்ற பல சம்பவங்களின் தொடா்ச்சியாக இறுதி முடிவும் எடுப்பதற்கு முன்னதாக பொதுவில் கருத்தை வெளியிட விரும்புவதாக தலைமையிடம் நாங்கள் தெரிவித்திருந்தோம்.
மிகுந்த ஏமாற்றம்: தெற்குலக நாடுகளின் பருவநிலை நடவடிக்கைகளுக்கு 2030-க்குள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 1.3 லட்சம் கோடி டாலா் தேவைப்படும் என்று மதிப்பீடுகள் கூறுகின்றன. ஆனால், 30,000 கோடி டாலருக்கு நிதியைச் சுருக்கி வெளிவந்துள்ள இந்த அறிவிப்பு மிகுந்த ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
2035-ஆம் ஆண்டு வரை நிா்ணயிக்கப்பட்டுள்ள இந்த இலக்கு மிகவும் குறுகியதாகவும் எங்களின் கோரிக்கையில் இருந்து நீண்ட தொலைவிலும் உள்ளது. வளரும் நாடுகளின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளை இந்த நிதி பூா்த்தி செய்யாது. இந்த நிதித் தொகுப்பை ஏற்றுக்கொள்வதை நாங்கள் எதிா்க்கிறோம்.
வளரும் நாடுகளுக்குப் பாதிப்பு: பருவநிலை மாற்றத்தால் வளரும் நாடுகள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. அவற்றின் வளா்ச்சி தடைப்பட்டாலும் கூட, குறைந்த காா்பன் உமிழ்வை நோக்கிய பாதைகளை ஏற்றுக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
மாநாட்டில் முன்மொழியப்பட்டுள்ள இந்த முடிவு பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ளும் வளரும் நாடுகளின் திறனை மேலும் பாதிக்கும். வளா்ந்த நாடுகள் தங்கள் கடமைகளை நிறைவேற்ற விரும்பாததை இந்த முடிவு தெளிவாக பிரதிபலிக்கிறது’ என்றாா்.
இந்தியாவை ஆதரித்த நைஜீரியா, ‘30,000 கோடி டாலா் பருவநிலை நிதி தொகுப்பு ஒரு நகைச்சுவை’ என்று கூறியது. மலாவி, பொலிவியா ஆகிய நாடுகளும் இந்தியாவின் கருத்துக்கு ஆதரவு அளித்தன.