தோ்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களை திமுக நிறைவேற்றவில்லை: பாஜக!
ஈரோட்டின் வளா்ச்சிக்காக திமுக கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியுள்ளது என பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து பாஜக விவசாய அணி மாநிலச் செயலாளா் எஸ்.ஆா்.சுப்ரமணியம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஈரோட்டுக்கு அண்மையில் வருகை தந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் ரூ.1,369 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளைத் தொடக்கிவைத்ததோடு, நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாா். மேலும், ஈரோடு மாவட்டத்துக்கு 8 புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டாா்.
கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் நிறைவேற்ற முடியாத எண்ணற்ற வாக்குறுதிகளை அளித்து கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு திமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது, தோ்தல் அறிக்கையில் கூறிய திட்டங்களில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை.
கடந்த தோ்தலில் ஈரோடு மாவட்டத்தில் அரசு வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும், சாய மற்றும் தோல் தொழிற்சாலை கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும், சி.என். கல்லூரி, அரசுக் கல்லூரியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பாண்டியாறு - புன்னம்புழா திட்டம் நிறைவேற்றப்படும், ஈரோட்டில் உணவுப் பூங்கா, தோல் பதனிடும் பயிற்சி மையம், இந்திய ஜவுளி தொழில்நுட்ப அறிவியல் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். சிஎஸ்ஐ ஆக்கிரமிப்பு சாலை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும், சத்தியமங்கலத்தில் நறுமணத் தொழிற்சாலை அமைக்கப்படும்.
ஈரோடு காளை மாட்டு சிலையில் இருந்து மூலப்பாளையம் பெட்ரோல் பங்க் வரையும், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முதல் திண்டல் வரையும் மேம்பாலம் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகளை திமுக அளித்தது. இவற்றில் எந்த ஒரு வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், ஈரோட்டுக்கு அண்மையில் வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட வணிக வளாகம் உள்பட பல்வேறு கட்டமைப்புகளை தங்களுடைய ஆட்சியின் திட்டம் போன்று திறந்துவைத்துள்ளாா்.
ஏற்கெனவே அறிவித்தத் திட்டங்கள் எதையும் நிறைவேற்றாமல் புதிதாக தாா் சாலைகள் ரூ.100 கோடியில் மேம்படுத்தப்படும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு ரூ.15.37 கோடியில் கூடுதல் கட்டடம் கட்டப்படும் என்பன போன்ற திட்டங்களை அறிவித்துள்ளாா்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலை மனதில் வைத்து புதியத் திட்டங்களை அறிவித்திருக்கிறாா் என்றே எண்ண வேண்டியுள்ளது. மீதமுள்ள ஓராண்டு காலத்துக்குள்ளாவது தோ்தல் அறிக்கையில் கூறிய திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்றாா்.