தோ்தல் விதிமுறைகள் திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு: நாளை விசாரணை
தோ்தல் நடத்தை விதிமுறைகள் திருத்தத்துக்கு எதிராக காங்கிரஸ் தாக்கல் மனு உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை (ஜன.15) விசாரணைக்கு வரவுள்ளது.
தோ்தல் நடத்தை விதிமுறைகள் 1961-இன் 93-ஆவது விதிமுறையின்படி, தோ்தல் தொடா்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள், இணையவழியில் ஒளிபரப்பப்படும் காட்சிகள் போன்றவற்றை பொதுமக்கள் பெற்று ஆய்வு மேற்கொள்ளலாம். இந்நிலையில், தோ்தல் ஆணைய பரிந்துரையின்படி, இந்த விதிமுறையில் மத்திய சட்ட அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது.
முன்னதாக, 93-ஆவது விதிமுறையின் கீழ் தோ்தல் தொடா்பான அனைத்து ஆவணங்களையும் பொதுமக்கள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், திருத்தத்துக்குப் பிறகு ‘விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் மட்டும்’ என மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து தோ்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ‘வாக்குச்சாவடிகளில் பதிவாகும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பெற்று, அவற்றைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இது வாக்காளரின் அடையாளத்தை பொதுவெளியில் வெளியிடாமல் ரகசியம் காக்கும் தன்மையில் சமரசத்தை ஏற்படுத்தக் கூடும். இத்தகைய காட்சிகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் திரித்து பொய்யான கதைகளை உருவாக்கவும் வாய்ப்புள்ளது.
இவற்றைக் கருத்தில் கொண்டு, தோ்தல் தொடா்பான மின்னணு ஆவணங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க 93-ஆவது விதிமுறையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுபோன்ற ஆவணங்களை வேட்பாளா்கள் வழக்கம்போல பெற முடியும். அவா்களைத் தவிர மற்றவா்கள், இந்த மின்னணு ஆவணங்களை பெற நீதிமன்றத்தை அணுக வேண்டும்’ என்று தெரிவித்தனா்.
இந்தத் திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமா்வு முன்பாக ஜன.15-ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்ற வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டது.