தைப்பூசம்: முருகப் பெருமானை எளிமையாக வழிபட்டு, வேண்டும் வரம் பெறுவது எப்படி?
தை மாதம் பிறந்ததும் தைப்பொங்கல் எவ்வளவு முக்கியமோ அதற்கு அடுத்தபடியாக நாம் எல்லாரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கக்கூடிய ஒரு நாள் தைப்பூசம். தைப்பூசம் முருகப்பெருமானுடைய பல முக்கியமான பண்டிகைகளில் தலைசிறந்ததாகவே கருதப்படுகிறது. தைப்பூச தினத்தில் முருகப்பெருமானை வழிபட்டால் சகல துன்பங்களும் நீங்கி இன்பங்கள் பெருகும் என்பார்கள்.
![காவடி எடுக்கும் பக்தர்கள்](https://gumlet.vikatan.com/vikatan/2024-04/41d72f85-d2df-44a0-9a41-068d6d609117/f10bcf1d_dfe3_4ae2_9088_09dd58a2377f.jpg)
பண்டைய காலத்தில் விழாக்களைத் தமிழர்கள் பௌர்ணமியை ஒட்டியே நடத்தினார்கள். காரணம் போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் நடந்தே கோயில்களுக்குச் செல்ல வேண்டும். அதிலும் மலைத்தலங்களுக்குச் செல்ல வேண்டும் என்றால் பௌர்ணமிக்கு மூன்று நான்கு தினங்களுக்கு முன்பாகப் புறப்பட்டு பௌர்ணமி நாளில் திருக்கோயிலை அடைந்து வழிபட்டு பின் நிலவொளி வீசும் அடுத்த மூன்று நாள்களுக்குள் ஊர் திரும்புவது வழக்கம்.
அப்படிப் பௌர்ணமியை ஒட்டிக் கொண்டாடப்படும் பண்டிகைகளே சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் ஆகியவை.
இவற்றுள் தைப்பூசம் முருகப்பெருமானுக்கு உரியதாகக் கொண்டாடப்படுகிறது. பழநியில் முருகப்பெருமான் கோயில் கொண்டது ஒரு தைப்பூச நாளிலேயே என்பார்கள். எனவேதான் பழநியில் தைப்பூசம் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
பூச நட்சத்திரத்தின் மகத்துவம்
பூச நட்சத்திரத்தின் அதிதேவதை குரு பிரகஸ்பதி. பிரகஸ்பதியைத் தேவர்களின் குரு எனப் போற்றுகின்றன புராணங்கள். அறுபத்து நான்கு கலைகளையும் அருள்பவர் குருபகவான். எனவே முருகப்பெருமான் குருவாக அருளும் தலங்களில் பூச நட்சத்திரத்தன்று வழிபடுவது சிறப்பு.
தை மாதத்தில் பூசமும் பௌர்ணமியும், சித்த யோகமும் கூடிய நடுப்பகல் வேளையில்தான் சிவபெருமான் திருநடனம் ஆடினார் என்கின்றன ஞான நூல்கள்.
தைப்பூசம் அறிவைப் பிரகாசிக்கச் செய்யும் நன்னாள் என்பதால் திருவருட்பிரகாச வள்ளலார் ஸித்தி விளாகத்தில் அந்த நாளில்தான் ஜோதியில் கலந்தார் என்பர். அங்கு ஏழு திரையை விலக்கி ஜோதிக்காட்சி வடலூரில் காட்டப்பெரும் நன்னாளும் தைப்பூசமே. சிவபெருமானும் முருகப்பெருமானும் வேறல்ல. இருவரும் ஒருவரே என்னும் தத்துவப்படி தைப்பூசம் - பங்குனி உத்திரம் - வைகாசி விசாகம் முதலான விசேஷ நாள்கள் முருகப்பெருமானுக்கும் உரியதாகக் கொண்டாடப்படுகின்றன.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-03/7ebe6bef-34a7-47f0-9f1a-72e86f00127d/Untitled_15.jpg)
பழநி முருகனை ஆண்டிக்கோலத்தில் வழிபடலாமா?
பழநியில் அருளும் தண்டாயுதபாணியைப் பற்றி பலவிதமான தவறான புரிதல்கள் கூட உண்டு. அவர் ஆண்டிக் கோலத்தில் அருள்பாலிப்பதால் அவரை வீட்டில் வைத்து வழிபட்டால் நாம் ஆண்டியாகிவிடுவோம் என்று சிலர் சொல்வார்கள். இது மிகவும் தவறு. முருகப்பெருமானுடைய 16 வடிவங்களில் மிகவும் விசேஷமான வடிவமாகச் சொல்லக்கூடிய ஸ்கந்தன் என்று சொல்லக்கூடிய பழநி தண்டாயுதபாணி திருவடிவம்.
பழநி முருகனுடைய தியான ஸ்லோகம்,
'கல்பத்ருமம் ப்ரணமதாம் கமலாருணாபம்
ஸ்கந்தம் புஜத்வயமனாமயமேகவக்த்ரம்
காத்யாயனீ ப்ரியசுதம் கடிபத்தவாமம்
கெளபீனதண்ட தரதக்ஷிணஹஸ்தமீடே.
இதன் கருத்து: கற்பக விருட்சம் எப்படிக் கேட்டதை எல்லாம் கொடுக்குமோ அதுபோல யார் இவனை வணங்குகிறார்களோ அவர்கள் கேட்டதை எல்லாம் கொடுக்கக்கூடிய ஒரு கற்பக விருட்சம் போல பழநி ஆண்டவன் விளங்குகிறானாம்.
அப்படிப்பட்ட முருகனை ஆண்டிக்கோலத்தில் வழிபடுவதன் மூலம் வேண்டும் வரம் கிடைக்கும். செல்வ வளம் சேரும். இதே திருக்கோலத்தில்தான் சுவாமி மலையிலும் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார் என்பது பலரும் அறியாத செய்தி. எனவே முருகப்பெருமானை ஞான குருவாக ஏற்றுத் தைப்பூச நாளில் வழிபாடு செய்ய வாழ்வில் ஏற்றம் உண்டாகும்.
தைப்பூச நாளில் எப்படி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும்?
பழநிக்குப் பாதயாத்திரை செல்வதும், காவடி எடுப்பதும் தைப்பூச விழாவின்போது பிரசித்தம். தமிழகத்தில் மட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீசியஸ் போன்ற பல நாடுகளிலும் தைப்பூச விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
தைப்பூச நாளில் முருகன் திருத்தலத்துக்குச் சென்று வழிபடுவது விசேஷம். இயலாதவர்கள் வீட்டிலேயே சிறப்பாக வழிபடலாம். தைப்பூச நாளில் அதிகாலையிலேயே எழுந்து நீராடிப் பிறகு நீறு பூசி ஆறெழுத்து மந்திரத்தைச் சொல்லி வழிபடலாம்.
வீட்டில் தைப்பூச தினத்தில் வீட்டில் ஆறு விளக்குகள் ஏற்றி முருகப்பெருமானைத் துதிக்க வேண்டும். கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ், வேல்மாறல் பாராயணம் போன்றவற்றைப் பாராயணம் செய்வது சிறப்பு.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-03/48fe1e3d-c85f-497f-90ab-8e7dfa62463d/IMG_20230306_130626.jpg)
சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வது சிறப்பு. இயலாதவர்கள் எளிமையாகத் தேனும் தினை மாவும் சமர்ப்பித்து முருகப்பெருமானை வழிபட்டாலேபோதும், வேண்டும் வரம் கிடைக்கும் என்கிறார்கள் பெரியோர்கள்.
குறிப்பாக முருகப்பெருமானுக்கு இந்த நாளில் பாலாபிஷேகம் செய்வது சிறப்பு. அருகில் உள்ள திருக்கோயிலுக்குப் பால் கொண்டு சென்று சமர்ப்பணம் செய்ய வேண்டும். குறைந்த அளவு பாலாக இருந்தாலும் அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நம் தலையில் சுமந்து ஆலயத்துக்குச் செல்ல வேண்டும் (பால்பாக்கெட்டாகக் கொண்டு செல்வது தவறு.)
தைப்பூசத்தன்று பால் குடம் எடுக்கும் வழக்கம் பலருக்கும் உண்டு. ஆனால் அதற்கு முறையாக விரதம் இருந்து எடுக்க வேண்டும். விரதம் இருக்காதவர்களாக இருந்தால் அவர்களும் பாலை ஒரு சிறு பாத்திரத்தில் விட்டுத் தலையில் சுமந்து சென்று பக்தியோடு சமர்ப்பித்தால் பால்குடம் எடுத்து வழிபட்ட பலன் கிடைக்கும்.
இந்த நாளில் மந்திர உபதேசம் பெறுவது சிறப்பு. முருகன் அடியார்களுக்குத் தங்களால் ஆன உதவியும் உபசாரமும் செய்வது மிகவும் சிறப்பு.
நாளை (11.2.24) மாலை 7.31 வரை பூச நட்சத்திரம் உள்ளது. எனவே அந்த நேரத்துக்குள் முருகப்பெருமானை வழிபட்டு வேண்டும் வரம் பெறுவோம்.