செய்திகள் :

தொகுதி மறுவரையறை: `அண்ணல் அம்பேத்கரை குற்றம்சாட்டுகிறாரா ஸ்டாலின்?’ - பாஜக கனகசபாபதி | களம் பகுதி 3

post image

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான், `களம்’

இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது Delimitation - `தொகுதி மறுவரையறை’ விவகாரம். பல்துறைகளை சார்ந்த பல்வேறு ஆளுமைகள் தினம் ஒருவர் என அது குறித்து விரிவாக தங்கள் கருத்துகளை முன்வைக்க உள்ளார்கள்.

எழுத்து : பேரா ப. கனகசபாபதி, மாநில துணைத் தலைவர், தமிழக பாஜக

கடந்த சில நாட்களாக திமுக தொகுதி வரையறை விசயத்தைக் கையிலெடுத்து தவறான தகவல்களைத் தந்து, அதை ஊதிப் பெரிதாக்கி முழுக்க முழுக்க மலிவான அரசியலைச் செய்து வருவது கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் அரசு நிர்வாகம் அவசரமாகச் செய்ய வேண்டிய பணிகள் எவ்வளவோ இருக்கின்றன. அரசின் பல துறைகளில் ஊழியர்களுக்குக் கொடுக்க வேண்டிய ஊதியம் உள்ளிட்ட அவர்களின் பல அடிப்படை உரிமைகள் இன்னமும் மறுக்கப்பட்டு வருகின்றன. பல வருடங்களாகப் போராடியும் அவர்களின் கோரிக்கைகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. இத்தனைக்கும் அவற்றில் பல திமுக ஆட்சிக்கு வரும் முன்னர் வாக்குறுதிகளாக கொடுக்கப்பட்டவை.

பேரா ப. கனகசபாபதி,

கட்டடங்கள் இல்லாத பள்ளிக் கூடங்களில் குழந்தைகள் மரத்தடியில் உட்கார்ந்து படிக்க வேண்டிய அவலம் நிலவி வருகிறது. பேருந்துகளில் ஏறிச் செல்லும்போது மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு செல்லும் வகையில் பழுது பார்க்கப்படாத பேருந்துகள் இன்னமும் பயணித்துக் கொண்டுள்ளன.

அதே சமயம் மதுபானக் கடைகள் புதிய பெயர்களில் தமிழகமெங்கும் திறக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பல அமைச்சர்கள் ஊழல் புகார்களில் சிக்கி நீதிமன்றம் சென்று கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றங்கள் அறிவுறுத்தியும் ஊழல் பேர் வழிகள் அமைச்சர்களாக வலம் வருகிறார்கள். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது.

`இல்லாத ஒரு விசயத்தை...’

இந்தப் பிரச்னைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாத திராவிட மாடல் அரசு, தமது குறைகளை மறைக்கத் தொடர்ந்து மத்திய அரசைக் குறை கூறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இல்லாத ஒரு விசயத்தை தேசியக் கல்விக் கொள்கையில் இருப்பதாகச் சொல்லி முதலில் மத்திய அரசு இந்தியைத் திணிக்கிறது எனக் குறை கூறினார்கள். அது பொய்யென மக்கள் உணரத் தொடங்கியதும் இப்போது அவர்கள் எடுத்துள்ள விசயம் தான் தொகுதி மறுவரையறை என்பது.

`மோடி அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது; கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகச் செயல்படுகிறது; தமிழகம் மட்டுமல்லாமல், தென்னிந்தியாவில் உள்ள மாநிலங்களின் பாராளுமன்றத் தொகுதிகளைக் குறைக்கத் திட்டம் தீட்டுகிறார்கள்; அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’ என திமுக மத்திய அரசைக் குற்றம் சாட்டி வருகிறது.

ஆனால் உண்மை நிலை என்ன? முதலில் இந்த விசயம் இப்போது மத்திய அரசால் எடுத்துக் கொள்ளப்படவேயில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பின்னர் மட்டுமே பரிசீலனைக்கு எடுக்கப்பட வேண்டிய விசயத்தை, இன்னமும் மக்கள் தொகை கணக்கெடுப்பே ஆரம்பிக்கப்படாத சூழ்நிலையிலேயே திமுக ஏன் கிளப்புகிறது?. மலிவான அரசியல்.

மோடி, ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்பு மோதல்

இரண்டாவது, தொகுதி மறுசீரமைப்பு என்பது ஏதோ, திரு நரேந்திர மோடி அவர்கள் 2014 ஆம் வருடம் பிரதமராக வந்த பின்னர், கொண்டு வந்த திட்டமல்ல. இது சுதந்திரம் அடைந்த காலம் தொடங்கி செயல்பட்டு வரும் திட்டம். அரசியலமைப்புச் சட்டம் 82 ஆவது பிரிவின் படி, ஒவ்வொரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து முடிந்த பின்னரும், அதன் அடிப்படையில் பாராளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு தொகுதிகளின் எண்ணிக்கைகள் முடிவு செய்யப்பட வேண்டும்.

அப்படித்தான் 1951, 1961 மற்றும் 1971 ஆம் வருடங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்புகள் முடிந்த பின்னர் 1952, 1962 மற்றும் 1973 ஆம் வருடங்களில் தொகுதிகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டன. அந்தப் பணிகளை மறுசீரமைப்பு குழு சட்டப்படி 1951 ஆம் வருடம் அமைக்கப்பட்டுள்ள மறுசீரமைப்புக் குழுவானது மேற்கொள்ளும்.

அப்படித்தான் 1952 ஆம் வருடம் 494 பாராளுமன்றத் தொகுதிகள் என முடிவு செய்யப்பட்டு, பின்னர் மக்கள் தொகை அடிப்படையில் 1973-ல் 543 என அதிகமாக்கப்பட்டது. அதன் பின் 1976-ம் வருடம் இந்திரா காந்தி அம்மையார் ஆட்சிக் காலத்தில் அவசர நிலைச் சட்டம் இருந்த போது, 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு முடியும் வரை இருக்கின்ற தொகுதிகள் அதே அளவு நீடிக்கும் வகையில் எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.

`அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில்...’

தொடர்ந்து 2001 ஆம் வருடம் மக்கள் தொகை கணக்கெடுப்பு பின்னர், அப்போதைய பிரதமர் திரு.வாஜ்பாய் அவர்கள் தென் மாநிலங்களின் கருத்துகளின் அடிப்படையில் பாராளுமன்றத் தொகுதிகள் மறு வரையறையை ஒத்தி வைத்தார். அதே சமயம் 2002 ஆம் ஆண்டில் நாட்டில் உள்ள மாநில சட்டமன்றங்களின் மொத்த எண்ணிக்கை 3,997 என்பதிலிருந்து 4,123 ஆக அதிகரிக்கப்பட்டது.

அதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் 84 ஆவது திருத்தச் சட்டம் 2002 ஆம் வருடம் கொண்டு வரப்பட்டது. அந்தச் சட்டமானது தொகுதிகள் மறுவரையறை என்பது 2026-ம் வருடத்துக்குப் பின் எடுக்கப்படும் மக்கள் தொகையின் அடிப்படையில் இருக்கும் எனச் சொல்கிறது. எனவே சுதந்திரத்துக்குப் பின் இதுவரை நடைபெற்ற நான்கு தொகுதி மறுவரையறைகள் மற்றும் பாராளுமன்ற – சட்டமன்றத் தொகுதிகளின் அதிகரிப்பு என்பவை அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தொகுதி மறுவரையறைக்குழு மேற்கொண்டு வருபவை தான்.

தொகுதி மறுவரையறை

எனவே இந்த விசயத்தில் மோடி அரசு எங்கே வந்தது? திரு.ஸ்டாலின் ஏன் மோடி அரசு வஞ்சிப்பதாகச் சொல்கிறார்? மத்திய அரசு அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. எனவே முதல்வர் தெரியாமல் சொல்கிறாரா? தெரிந்து சொல்வதாக இருந்தால், அவர் மறைமுகமாக அரசியலமைப்புச் சட்டத்தையும் அதை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட பெருமக்களையும் குற்றம் சாட்டுகிறாரா? எனவே இது முழுக்க முழுக்க அரசியல்.

இந்த விசயத்தில் நாட்டைப் பல வருட காலம் ஆட்சி செய்த காங்கிரஸ், தேசியக் கட்சியான கம்யூனிஸ்டு உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் திமுக-வின் நிலைப்பாட்டை ஆதரித்தும், கள்ள மௌனம் காத்தும் வருவது வருத்தமளிக்கும் செயலாகும். இந்தி மொழியை எதிர்த்துப் பேசி காணாமல் போன ’இந்தி’ கூட்டணிக் கட்சிகளின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்ட திமுக, இப்போது அதைச் சரி செய்ய தென் மாநில முதல்வர்களைச் சந்தித்து தொகுதி மறுவரையறை விசயத்தில் தம்மை முன்னிறுத்திக் கொள்ளலாம் என்னும் கற்பனையில் நடவடிக்கைகளை எடுக்கிறது. தமது கட்சித் தலைவர்களை குறிப்பிட்ட ஏழு மாநில முதல்வர்களைச் சந்திக்கச் சொல்லி அனுப்பிவுள்ளது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

பத்து நாட்கள் முன் மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா அவர்கள் கோவை வந்திருந்த போது தொகுதி மறுசீரமைப்பு விசயத்தில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகள் குறைக்கப்படாது எனச் சொல்லியிருக்கிறார். உள்துறை அமைச்சரே அறிவித்த பின்னரும், திமுக ஏன் மீண்டும் மீண்டும் மத்திய அரசைக் குறை சொல்லி இந்த விசயத்தைப் பேசி வருகிறது?

தங்களின் ஊழல்கள் மற்றும் நிர்வாகத் திறமையின்மையை மறைக்கவும், திமுக மேல் மக்களுக்கு ஏற்பட்டு வரும் வெறுப்புகளைத் திசை திருப்பவுமே இப்போது மறுவரையறை விசயத்தைக் கையில் எடுத்துள்ளது. மோடி அவர்களின் அரசு எந்த மாநில அரசுக்கும் எதிரானதல்ல. மாறாக மாநிலங்களுடன் இணைந்து தேசத்தை முன்னேற்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் அரசு.

ஆகையால் முழுக்க முழுக்க மலிவு அரசியலுக்காக திமுக அரசு எடுத்துள்ள தொகுதி மறுவரையறை விசயம் மக்களால் நிராகரிக்கப்பட வேண்டும். மாநிலம் முழுதும் வியாபித்திருக்கும் ஊழல்களைத் தடுத்து நிறுத்தி, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதைத் திமுக அரசு இனிமேலாவது செய்ய முயற்சிக்க வேண்டும்.”

நாளை : களம் பகுதி 4 : `தெற்கும் தேயவேண்டாம் வடக்கும் வீங்கவேண்டாம்’ - ஆதவன் தீட்சண்யா

(தொடரும்..!)

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

"பாஜக கூட்டணி ஆட்சியில் மகளிருக்கு ரூ. 2500 உரிமைத் தொகை; மாவட்டத்திற்கு 2 நவோதயா பள்ளி - அண்ணாமலை

தென்காசி மாவட்ட பா.ஜ.க. சார்பில் தி.மு.க. அரசைக் கண்டித்து 'தீய சக்திகளை வேரறுப்போம்' எனும் தலைப்பில் புளியங்குடியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தலைமை... மேலும் பார்க்க

TVK: "விஜய்யின் டிரைவர் மகனுக்கு மா.செ பதவி; விஜய் காரை மறித்து மனு' - பனையூர் பரபர!

தமிழக வெற்றிக் கழகத்தின் 6 ஆம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை விஜய் இன்று வெளியிட்டிருக்கிறார். விஜய் முதல் 5 கட்டமாக மா.செ-களை அறிவித்தபோது பெரிய சலசலப்பில்லை. ஆனால், இன்று விஜய் அறிவித்திருக்கும... மேலும் பார்க்க

இந்தியாவில் முதல்முறை... TN BUDGET-ல் Twist வைத்த DMK Govt | Parliament | Imperfect Show

Vikatan WhatsApp Channelஇணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINKhttps://bit.ly/VikatanWAChannel மேலும் பார்க்க

புதுச்சேரி: "பூரண மதுவிலக்குக்கு நான் தயார்... எம்.எல்.ஏ-க்கள் தயாரா?" - முதல்வர் ரங்கசாமி கேள்வி

புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ-க்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து முதல்வர் ரங்கசாமி பேசுகையில், "கடந்த மூன்று ஆண்டுகளில் அரசுத் துறைகளில் காலியா... மேலும் பார்க்க

”இந்தி ஈஸியான மொழி; இந்தி தெரிந்தால் அனைத்து மாநிலங்களையும் தொடர்பு கொள்ளலாம்” - டி.டி.வி.தினகரன்

தஞ்சாவூரில் அ.ம.மு.க நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, "முன்னாள் அமைச்சர் வைத்திலிங... மேலும் பார்க்க

Immigration and Foreigners Bill: குடியேறிகளுக்குப் புதிய மசோதா கொண்டு வந்த பாஜக அரசு | முழு விவரம்

Immigrants எனப்படும் குடியேறிகள் தொடர்பாக மத்திய அரசு புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மசோதா குறித்து விரிவாகக் காணலாம்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத... மேலும் பார்க்க