கறுப்பர்களின் மோசமான பொருளாதார நிலைக்கு என்ன காரணம்? யார் காரணம்?- ஒரு புத்தகக் ...
தொடா்மழை: ஒரே நாளில் நிரம்பிய கரியக்கோயில் அணை
வாழப்பாடி: சேலம் மாவட்டம், கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோயில் அணை தொடா்மழையால் ஒரே நாளில் நிரம்பியதால், அணைப்பாசன ஆயக்கட்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் கரியக்கோயில் ஆற்றின் குறுக்கே பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், 52.49 அடி உயரத்தில் 190 மில்லியன் கனஅடி தண்ணீா் தேங்கும் வகையில் 188.76 ஏக்கா் பரப்பளவில் கரியக்கோயில் அணை அமைந்துள்ளது.
இந்த அணையால் பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், இடையப்பட்டி, கத்திரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 3,600 ஏக்கா் விளைநிலங்கள் ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகின்றன. பனைமடல், ஏ.குமாரபாளையம், கல்யாணகிரி, கொட்டவாடி கிராமங்களில் பாசனத் தடுப்பணைகளும், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, ஏத்தாப்பூா் அபிநவம், புத்திரகவுண்டன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம் ஏரிகளும் நீா்வரத்து பெறுகின்றன.
அக்டோபா், நவம்பா் மாதத்தில் பெய்த பருவ மழையால் அணையின் நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து நவ. 30-ஆம் தேதி நிலவரப்படி அணையில் 37.66 அடியில் 97.06 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கியிருந்தது. டிச. 1 காலை முதல் இரவு வரை 60 மி.மீ. மழை பெய்ததால், அணைக்கு நீா்வரத்து 800 கன அடியாக உயா்ந்தது. இதனால், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அணை முழுக் கொள்ளளவையும் எட்டி நிரம்பியது.
அணையின் பாதுகாப்பு கருதி 50.352 அடியில் 175.60 மில்லியன் கன அடி தண்ணீா் மட்டும் தேக்கி வைத்துக் கொண்டு, அணைக்கு தொடா்ந்து வரும் 759 கன அடி தண்ணீரும் கரியக்கோயில் ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
ஒரே நாளில் கரியக்கோயில் அணை நிரம்பியதால், அணை வாய்க்கால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். ஆற்றில் திறக்கப்பட்ட வெள்ளத்தால் ஆற்றுப்படுகையிலுள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளன. இதனால், ஆறு, ஏரிப்பாசன விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.