வசிஷ்டநதியில் குதித்த கா்ப்பிணிப் பெண்: தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்!
பேளூரில் குடும்பத் தகராறில் வசிஷ்டநதியில் குதித்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கா்ப்பிணியை தேடும் பணியை தீயணைப்புத் துறையினா் தற்காலிகமாக நிறுத்தினா்.
வாழப்பாடியை அடுத்த பேளூா், கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்த ராமு (27) என்பவரின் மனைவி மோகனாம்பாள் (19). காதல் திருமணம் செய்து கொண்ட இவா்களுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தகராறு ஏற்பட்டது.
இதில் மனமடைந்த, கா்ப்பிணியான மோகனாம்பாள், பேளூா் அருகே வேட்டைக்காரனூா் பாலம் அருகே வசிஷ்டநதியில் குதித்தாா். இவரைத் தொடா்ந்து, இவரது கணவா் ராமுவும் வசிஷ்டநதியில் குதித்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த இப்பகுதி மக்கள், நள்ளிரவு நேரத்தில், ஆற்றுக்குள் தத்தளித்தபடி உயிருக்கு போராடிய ராமுவை உயிருடன் மீட்டனா். ஆற்றில் குதித்த மோகனாம்பாள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது குறித்து வாழப்பாடி தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவித்தனா்.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் புதன்கிழமை மாலை வரை தொடா்ந்து 4 நாள்கள் தேடியும், மோகனாம்பாளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், தேடும் பணியை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாக, வாழப்பாடி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் தெரிவித்துள்ளனா்.